ADVERTISEMENT

உணவும் ஆரோக்கியமும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது

ஆரோக்கியமாக இருப்பது எப்படி?

சிலர் காலையில் எழுந்தது முதல் வேலையில் இறங்கி விடுகின்றனர். முன்பெல்லாம் உணவு உண்பதற்கு என்று தனியாக அரை மணி நேரம் இருந்தது. ஆனால் இப்போது ஒரு 10 நிமிடம் கிடைத்தாலே பெரிய விஷயம் போல் ஆகிவிட்டது.  இப்படியே சென்றால் ஆரோக்கியம் பாதிப்படைவது நிச்சயம். இதுவரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலக வேலைக்கு சென்று வந்த காலத்தில் நம் உணவுப் பழக்கம் சீராக இருந்தது. எப்போது ‘ ஒர்க் ஃப்ரம் ஹோம் ‘ எனப்படும் வீட்டிலிருந்தே அலுவலக வேலை என்று வந்ததோ, அதிலிருந்து நேரம் காலம் இல்லாமல் கணினி முன் உட்கார்ந்து பணியாற்ற வேண்டியுள்ளது.

பெண்கள் உட்கார்ந்த நிலையிலேயே இருப்பதால், பல நோய்கள் வரக்கூடும். அதில் மிக மோசமான ஒன்று தான் பி.சி.ஓ.டி ( பாலி சிஸ்டிக் ஓவேரியன் டிஸ் ஸார்டர் ) கருப்பையில் ஏற்படும் கட்டி என்று இதைக் கூறலாம். இந்தக் கட்டியில் நீர் அதிகமாகத் தேங்கி இருக்கும். இதனால் மாதவிடாய் தள்ளிப் போகும். வெகு நாட்கள் சரி செய்யாமல் இருந்தால் முகத்தில் முடி வளர்ச்சி, உடல் பருமன், முகப்பரு மற்றும் கருவுறுதலில் சிக்கல்கள் ஏற்படும். இது போன்ற நோய் பற்றி அதிகம் விழிப்புணர்வு தேவை. அதுவும் வீட்டிலேயே பணிபுரியும் நபருக்கு நிச்சயமாக பாதிப்பு அதிகம் வர வாய்ப்பு உண்டு. இதற்கு முக்கியமான காரணம் சரியான ஊட்டச் சத்து மற்றும் உடற்பயிற்சி இல்லாமல் சோம்பேறியாக இருப்பது தான். அதிகக் கொழுப்பு சத்துள்ள துரித உணவு உண்பதாலும் இது வரக்கூடும்.

மேலும் படிக்க: முதுமையைத் தடுக்கும் முத்தான வழிகள்

மாதவிடாய் வராமல் நின்று விட்டால் அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் பல மாதங்கள் வரவில்லையெனில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்து இதை உறுதிப் படுத்தலாம். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறலாம். சில நேரங்களில் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்தாலே இதை சுலபமாகக் குணப்படுத்தலாம்.

உடல் எடையைக் குறைத்தல் மற்றும் உணவுப் பழக்கத்தில் மாற்றங்கள் செய்தால் போதுமானது. இதற்கான மற்றுமொரு காரணம் மன அழுத்தம். இதை நுனியிலேயே கிள்ளிவிட்டால் இந்த நோய் மட்டுமல்ல வேறு எந்த நோயும் அண்டாது. வீட்டிலிருந்து வேலை பார்க்கும்போது இதையெல்லாம் எப்படிச் சரி செய்வது? இதற்காக எப்படி நேரம் செலவழிப்பது? என்று குழப்பமாக இருந்தால், இதன் பின் விளைவுகளைப் பற்றி சற்று சிந்தித்து பாருங்கள். வேலையின் இடைவேளைகளில் உடற்பயிற்சி செய்யலாம்.

ADVERTISEMENT

பால் சார்ந்த பதப்படுத்திய உணவுப் பொருட்கள் அதிகம் எடுத்துக்கொள்ளாமல் இருக்கலாம். மூச்சுப் பயிற்சி செய்து மன அழுத்தத்தைக் குறைக்கலாம். முடிந்த வரை ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் நடைப் பயிற்சி மேற்கொள்ளலாம். கிடைத்த நேரத்தில் ஓடி அசைந்து விளையாடுவது போல் ஏதாவது உடல் இயக்கம் சார்ந்த வேலைகளை செய்தால், உடற்பயிற்சி செய்வது போல் கடினமாகத் தோன்றாது. எடைக்குறைவு, மன நிம்மதி மற்றும் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் இருந்தால் வெகு விரைவில் மாற்றத்தை உணரலாம்.

குழந்தைகளும், சமையல் கற்றுக்கொள்வது அவசியம்:

இன்றைய தலைமுறையினர் பலருக்கும் சமைக்கத் தெரிவதில்லை. விளைவு, ஓட்டலுக்குச் சென்று சாப்பிடுவது, ரெடிமேட் பொருள்களை வாங்கிச் சாப்பிடுவது என்றிருக்கிறார்கள். ரெடிமேட் பொருள்களைச் சாப்பிடுவதை விடவும் சற்று தீவிரமான பிரச்சினை, உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவது. காரணம், அது சமையலறை என்ற ஒன்று இருப்பதையே மறக்க வைத்துவிடும். செலவுக்கு செலவும் வீண், உடல் உழைப்பும் கிடைக்காது.

இந்த ரெடிமேட் பொருள்கள், ஓட்டல் சாப்பாட்டையெல்லாம் யார் வாங்குகிறார்கள்? இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் யார்? என்று தரவுகளை ஆராய்ந்து பார்த்தால், இவை அனைத்தும் இளம் தலைமுறையினர் என்று நமக்கு புலப்படும். சமைப்பதற்கு, ஆண் பெண் வேறுபாடெல்லாம் பார்க்கக்கூடாது என்று நாம் பேசிவந்தாலும், வயது வேறுபாடு பார்க்கப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

வயதானவர்கள் ரெடிமேட் நோக்கி அதிகம் செல்லாமலிருக்க முக்கிய காரணம், அவர்களுக்கு சமையலின் நுணுக்கம் தெரிகிறது. நான் 5 நிமிஷத்துல செஞ்சுடுவேன் என சொல்லிவிடுவார்கள். இந்த 5 நிமிட சூட்சுமம் தெரிந்துவிட்டால் எல்லாரும் சமையல்காரர்கள்தாம். ஆனால் இதுகூட தெரியாதவர்கள் இன்றைய இளம் தலைமுறையினர் என்பது வேதனை. இளம் தலைமுறையினருக்கு தெரியவில்லை என்பதில், அவர்கள் மீது எந்தளவுக்கு குறை இருக்கிறதோ, அதே அளவுக்கு இவர்களுக்குச் சொல்லிக்கொடுக்காமல் வளர்த்திருக்கிறார்கள் என வீட்டுப்பெரியவர்கள் மீதும் குறை சொல்லியே ஆக வேண்டும். குறை சொல்வது ஒருபக்கம் என்றாலும், இதைச் சரிசெய்வது இப்போதைக்கு முக்கியம்.

மேலும் படிக்க: இல்லத்தை அழகாக்கும் எளிய வழிமுறைகள்

ADVERTISEMENT

சிறுவயதிலிருந்தே சிறு சிறு சமையல் நுணுக்கங்களைக் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக்கொடுக்க வேண்டும். தோசை ஊற்றுவது, டீ தயார் செய்வது, சப்பாத்தி தயார் செய்வது , குக்கரில் சாதம் வைப்பது போன்றவற்றை முதற்கட்டமாகவும் , அவர்கள் பள்ளிப்படிப்பை முடிக்கும் நேரத்தில் குழம்பு அல்லது குருமா வைப்பதன் அடிப்படையை அடுத்தக் கட்டமாகவும் சொல்லிக்கொடுத்தால் போதும். அடுத்தடுத்து கல்லூரி நாள்களில் அவர்களுக்கு சுவை நுணுக்களைச் சொல்லிக்கொடுத்தால் சமையலில் தேறிவிடுவார்கள். இது, அதற்கடுத்த பருவமான திருமணம், வேலைக்காக வெளியூரில் சென்று தங்குவது போன்ற நிலையில், சுயமாகவும் எளிமையாகவும் சமைத்துக்கொள்ள அவர்களுக்கு உதவும்.

முன்பே சொன்னது போல, சமைப்பதற்கு ஆணாகவும் இருக்க வேண்டாம், பெண்ணாகவும் இருக்க வேண்டாம். பசி போதும்! எல்லோருக்கும் பசி உணர்வு உண்டு என்பது, மறைமுகமாக நாம் எல்லோரும் சமைக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது. அவசரத்துக்கு மட்டும் ரெடிமேடை உபயோகப்படுத்த வேண்டும். உடல்நலனுக்கும், பொருளாதார நலனுக்கும் வீட்டில் சமைப்பதே நல்லது. அந்த நல்ல பழக்கத்தை நாம் நம் அடுத்த தலைமுறைக்கும் பழக்க வேண்டும்.

அடம்பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

வீட்டில் இருக்கும் அம்மாக்களுக்கு பெரிய சவாலான விஷயம் என்றால், குழந்தைகளை சாப்பிட வைப்பதுதான்.

புதுப்புது ரெசிபிக்களை விதம்விதமாக செய்து கொடுத்தாலும், குழந்தைகளிடம் இருந்து வரும் பதில் என்னவோ “வேண்டாம்” என்பதுதான். குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் பிடிக்க பல உளவியல் காரணங்கள் உள்ளன. அவற்றை சரி செய்ய சில வழிகள்….

எந்த உணவையும் குழந்தைகளுக்குத் தகுந்த முறையில், தகுந்த சுவையில் கொடுத்தால் கட்டாயம் அடம்பிடிக்கும் குழந்தைகளைக் கூட சமர்த்தாக உண்ண வைக்க முடியும்.

ADVERTISEMENT

நொறுக்குத் தீனியை குறையுங்கள்:

குழந்தைகள் தேவையற்ற நொறுக்குத் தீனியை அடிக்கடி உண்பதால், வயிறு நிரம்பிய உணர்வைப் பெறுகின்றனர். இதனால் உணவு சாப்பிட மறுக்கின்றனர். ஆதலால் நொறுக்குத் தீனியின் பக்கம் கவனம் செலுத்தாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பசிக்கு உணவு:

குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் பசி எடுக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். பசி எடுக்கும் நேரத்தில் உணவு கொடுத்தால், முழுமையாகச் சாப்பிடுவார்கள்.

சாப்பிடும் தட்டு:

குழந்தைகளுக்குப் பிடித்த உணவு அளிப்பது மட்டுமல்ல, குழந்தைகளைக் கவரும் வகையில், பல நிறங்களிலும், வடிவங்களிலும் சாப்பிடும் தட்டுகள் இருக்கின்றன. அதில், உணவு வழங்கினால், சாப்பிடும் ஆர்வம் மேலோங்கும்.

காரணம் தேடுங்கள்:

குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த உணவை வெறுக்கிறார்கள் என்றால், அதற்குப் பல காரணங்கள் இருக்கும். வயிற்றில் ஏதேனும் தொந்தரவு இருந்தாலும் உணவு உண்ண முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகக் கூடும். எனவே, அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.

பசியைத் தூண்டுங்கள்:

உடலுழைப்பு ஏதுமின்றி, வீட்டிற்குள்ளேயே குழந்தைகளை அடைத்து வைக்காமல், களைத்து போகும் வரை குழந்தைகளை ஓடி , ஆடி விளையாட அனுமதியுங்கள். உடல் களைத்துப் போனால், தானாகப் பசி எடுத்து உணவை ஆர்வமாக உண்ணுவார்கள்.

ADVERTISEMENT

அழகாக்குங்கள்:

உணவை எப்போதும் ஒரே மாதிரியாக வழங்கினால் குழந்தைகளுக்கு அதன் மேல் வெறுப்புதான் உண்டாகும். அதனால் கொடுக்கும் உணவை புதுமையாகவும், அவர்களுக்கு பிடித்த வகையில் அழகுபடுத்தியும் வழங்கலாம்.

அன்பு காட்டுங்கள்:

எப்போதும் அவர்களிடம் ஒரே மாதிரியாக அன்பு காட்டுங்கள். உணவு ஊட்டும் போது மட்டும் கொஞ்சிப் பேசாதீர்கள். ஏனென்றால் அந்த கரிசன நேரத்தை நீட்டித்துக் கொள்ள நீண்ட நேரம் எடுத்துக்கொள்வார்கள்.

ஒன்றாக உண்ணுங்கள்:

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணுங்கள். இடையிடையே, அந்த உணவின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சிறு, சிறு விஷயங்களையோ, கதைகளையோ குழந்தைகளுக்குக் கூறிக் கொண்டே உணவு கொடுங்கள். இது, குழந்தைகளுக்கு குடும்பத்தின் மீதான அன்பை அதிகரிக்கும்.

மேலும் படிக்க: ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்

கதை கேட்கும் ஆர்வத்தில் உணவையும் முழுமையாக உண்பார்கள். தவிர, குழந்தைகளுக்கு மொபைல், டி.வி. பழக்கத்தைக் குறைத்து, நல்ல உறக்கத்தைக் கொடுக்க வேண்டும். அது, செரிமான பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். இதுபோன்று சிறு, சிறு யுத்திகளைக் கையாண்டாலே குழந்தைகளை சாப்பிட வைப்பது வெகு சுலபம்.

ADVERTISEMENT

மன அழுத்தத்தைக் குறைக்கும் நீல தேநீர்!

உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற காரணத்தால் டீ , காபி அருந்தும் நீண்ட கால பழக்கத்தையே பலரும் தவிர்த்து விட்டனர். சிலர் அதன் தொடர்ச்சியாக ‘ கிரீன் டீ ‘ போன்ற பானங்களை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். உடல் எடையைச் சீராக வைத்து கொள்ள ‘ கிரீன் டீ ‘ உதவி புரிவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

தினமும் காலையில் பருகுவதால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப்பட்டு, புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. அதேபோல இயற்கை ஆர்வலர்களால் குறிப்பிடப்படும் இன்னொரு வகை ‘ புளூ டீ ‘ ஆகும். அதன் பெயருக்கான காரணம், நீல நிற சங்குப் பூவின் மூலம் தயாரிக்கப்படுவதாகும்.

ஒவ்வொரு பூவுக்கும் குறிப்பிட்ட மருத்துவக் குணம் இருக்கிறது. அதன் அடிப்படையில், பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட நீல நிற சங்குப் பூ கொண்டு தயாரிக்கப்படும் ‘ புளூ டீ ‘ உடல் நலனுக்கு ஏற்றதாக சொல்லப்படுகிறது. அதில் ‘ஆன்டி – கிளைகேஷன் ‘ இருப்பதால் வயது முதிர்வை தடுத்து, இளமையைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. தலையின் மேற்பாகத்தில் அமைந்துள்ள நுண் துளைகளில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை தூண்டக் கூடியது. உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரலை பாதுகாக்கிறது.

மேலும் படிக்க: உங்களை நீங்களே மெருகேற்ற வேண்டும்

நீரிழிவு நோயாளிகளின் உடலில் சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க உதவுவதாகவும் ஆராய்ச்சிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘புளூ டீயில்’ இருக்கும் ஃப்ளேவனாய்ட்ஸ் ‘ என்ற ரசாயனம் புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை அழிக்கிறதாம். அத்துடன், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுக்களிலிருந்தும் பாதுகாப்பதாக சொல்லப்பட்டுள்ளது. கொழுப்பு நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிடும் பழக்கம் காரணமாக எடை அதிகமாக உள்ளவர்களுக்கு ‘ புளூ டீ ‘ பெரிதும் உதவியாக இருக்கிறது. தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் அதற்கு உண்டு. வேலைப் பளுவின் காரணமாக உரிய நேரத்திற்குச் சரியாக சாப்பிட முடியாமல் இருப்பவர்களுக்கு நாளடைவில் குடற்புண் பாதிப்பு ஏற்பட்டு விடலாம். அவர்களுக்கு பயன் அளிக்கக்கூடிய பானமாக ‘ புளூ டீ ‘ உள்ளது.

ADVERTISEMENT

மேலும், அஜீரணத்தை குணமாக்குவதுடன், வயிற்றில் உண்டாகும் எரிச்சலையும் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் உடலின் வெப்ப நிலையைச் சீராக வைத்துக் கொள்ளவும் துணை புரிகிறது. உடல் வெப்பம் சீரற்ற நிலையில் இருப்பவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் சுறுசுறுப்பாக செய்ய இயலாது. குறிப்பாக, ‘ புளூ டீ ‘ அருந்துவதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமானது, மன அழுத்தத்தை தவிர்க்க உதவுவதாகும். 

‘ புளூ டீ ‘ தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாமா?

‘ கிரீன் டீ ‘ தயாரிப்பது போன்றே இதையும் தயாரிக்க வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரில் சில சங்குப் பூக்களை போட்டு, 5 நிமிடம் கழித்தவுடன் இறக்கி வடிகட்டிக்கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சைச் சாறு சில சொட்டுகள் விட்டு, தேவையான அளவு சுத்தமான தேன் சேர்த்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பருகலாம். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சிகிச்சை பெறும் நோயாளிகள் ஆகியோர் கட்டாயம் தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி ‘ புளு டீ ‘ அருந்தக் கூடாது.