ADVERTISEMENT

நம் வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டியவைகள்

நம் வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டியவைகள்:

மனிதனின் வயது அதிகரிக்கும்போதே, வயது முதிர்ச்சியால் ஏற்படும் நோய்களும் அதிகரிக்கின்றன. அவற்றில் முதன்மையாகக் கருதப்படுவது மூச்சுத் திணறல். வீட்டில் சில மூலிகைச் செடிகளை வளர்த்தாலே இதை சரிசெய்யலாம் என்கிறது மூலிகை மருத்துவம். சீரான சுவாசத்தை மேம்படுத்துவதற்கு, நம் வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய சில செடிகள்…..

கொத்தமல்லி:

கொத்தமல்லி சுவாசத்தை மேம்படுத்துவதுடன் இதய பலவீனம், நாவறட்சி, மயக்கம், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப் போக்கு, தலைச்சுற்றல், வலிப்பு, மற்றும் கண்ணில் நீர் வடிதல் ஆகியவற்றைச் சரிசெய்யும். அத்துடன் நாம் சமையலுக்கும் பயன்படுத்தலாம். வெறுமனே இதை அப்படியே சாப்பிடலாம்.

ஓமவல்லி செடி:

ஓமவல்லி சுவாசத்தைச் சீராக்குவதுடன் இருமல், சளி, காய்ச்சலை போக்கும். தலைவலி நீங்கும். உடல் சூட்டைத் தணிக்கும். இதை துளசி, இஞ்சி, வெற்றிலை மற்றும் மிளகுடன் சேர்த்து கசாயம் வடிவில் குடிக்கலாம்.

பொன்னாங்கண்ணி செடி:

பொன்னாங்கண்ணி மூச்சுத் திணறலை சரிசெய்வதுடன் உடலை குளிர்ச்சியாக்கும். கண் நோய்கள் வராது காக்கும். கை, கால் எரிச்சல், வயிற்று வலி ஆகியவற்றைத் தீர்க்கும். இதை தவிர, சமைத்து உணவாகச் சாப்பிடலாம்.

நந்தியா வட்டம்:

நந்தியா வட்டம் பெரும்பாலும் வாசம் குறைவாக இருக்கும் செடி, ஆனால், சுகமான சுவாசத்துக்குப் பெரிதும் உதவக்கூடியது. நந்தியா வட்டப் பூக்களை ஒத்தடம் கொடுக்க, கண் எரிச்சல், பார்வை மந்தம் நீங்கும். அதன் வேரை மென்று துப்பினால் பல்வலி நீங்கும். கறிவேப்பிலை செடி, இதன் இலை, பட்டை, காம்பு என அனைத்து பாகங்களிலும் நறுமணம் வீசும். இதன் இலையை மருந்தாக, உணவாக, அழகுக்கு எனப் பலவிதங்களில் பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT

மேலும் படிக்க: முதுமையைத் தடுக்கும் முத்தான வழிகள்

கறிவேப்பிலை:

கறிவேப்பிலையை வெறுமனே சாப்பிடலாம். குமட்டல், வாந்தி, செரியாமையால் வரும் பேதி, வயிற்றுக்கோளாறு, மலச்சிக்கல், சளி, இருமல், பித்தம், நீர்க்கோவை மற்றும் வாயு பிரச்சினைகளைச் சரிசெய்யும்.

நித்திய கல்யாணி:

நித்திய கல்யாணி இன்றும் கிராமப்புறங்களில் சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ என்ற பெயரில் எல்லா பருவங்களிலும் பூத்துக் குலுங்கும் செடி. அழகுக்காக வளர்க்கப்படும் இந்த செடியின் வாசம் சற்று அசவுகரியத்தை ஏற்படுத்தினாலும், சுவாச மண்டலத்தைச் சீராக்க உதவுகிறது. இதை வெறுமனே தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து , குடிக்கலாம். சர்க்கரை நோய், உடல் பலவினம், பசி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.

மருதோன்றி செடி:

மருதோன்றி செடி ஈட்டி வடிவ இலைகளையும், வெள்ளை நிற பூக்களையும், நல்ல மணத்தையும், கொண்ட குறுஞ்செடி . இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வாய்கொப்பளிக்க வாய்ப்புண், சிறுகாயம், சிராய்ப்பு ஆகியவற்றை சரிசெய்யும்.

கீரை வளர்ப்பு:

கீரை விளைவிக்கும் முறை மிகவும் எளிது. பொதுவாக, ஒரு காய்கறிச் செடி வளர்ந்த பின்னர், அதிலுள்ள காய்களை அறுவடை செய்ய, இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகலாம். ஆனால், கீரை வகைகள் விளைவதற்கு 25 முதல் 30 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்கின்றன. ஒரு சதுர அடிக்கு ஒரு கீரை விளைவிக்கலாம். உதாரணமாக, ஆறுக்கு, நான்கு அடி இடத்தில் சுமார் 24 கீரை கட்டுகள் அறுவடை செய்யலாம்.

ADVERTISEMENT

முதலில் கீரை விளைவிக்க தேர்வு செய்யப்பட்ட இட அளவிற்கு ஏற்றவாறு, ‘ பிளக்ஸ் ஷீட் ‘ விரித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதன் ஓரங்களில் இரண்டு செங்கலை ஒன்றன்மீது ஒன்றை அடுக்கி, பாத்தி கட்டுவது போல, சுற்றிலும் அடுக்கிக்கொள்ள வேண்டும். தோராயமாக ஒரு செங்கல் 4 அங்குலம் என்ற நிலையில், 8 அங்குல அளவில் கீரைத் தோட்டத்திற்கான பாத்தி அமைந்து விடும். அதற்குள் 6 அங்குலம் மண் கலவை, காய்கறி கழிவு உரம், கோக்கோ பிட், மண் புழு உரம், ஆட்டுப் புழுக்கை, மாட்டுச் சாணம் ஆகியவற்றை ஒவ்வொரு பங்கு போட வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லையென்றால் கூட பரவாயில்லை.

மேலும் படிக்க: பெண்களுக்கான சில மருத்துவ குறிப்புகள்

பின்னர் கீரை விதைகளை, அதில் தூவி விட்டு, சிறிது தண்ணீரை அதன்மேல் தெளித்தால் போதும். விதை முளைவிடும் போது, அந்த இடம் ஈரமாகவும், இருட்டாகவும் இருப்பது முக்கியம். எனவே, வெயில் படாதவாறு அதை துணி அல்லது ‘ஷீட் ‘ கொண்டு 3 நாட்கள் வரை மூடி வைக்க வேண்டும். அதன் பின்னர் 25-30 நாட்களில், கீரை அறுவடைக்குத் தயாராகிவிடும்.

அறுவடை நாள் வந்ததும், எல்லா கீரையையும் மொத்தமாக அறுவடை செய்துவிடாமல் ஒரே ஒரு கிரை செடியை மட்டும் விட்டுவிட வேண்டும். அது முழுதாக வளர்ந்து பூ பூத்து, அதிலிருந்து விதை கிடைக்கும். அதை, அடுத்த விளைச்சலுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுபோல சுழற்சி முறையில் அடுத்தடுத்த விளைச்சல்களை எளிதாக மேற்கொள்ளலாம். மேலும், செயற்கை உரம் எதுவும் போடாமல், நேரடி கண்காணிப்பில் விளைவிப்பதால், அதிக செலவு இல்லாமல், ஆரோக்கியம் அளிக்கும் உணவு நேராக நம் சாப்பாட்டு மேசைக்கே வருகிறது.

அபார்ட்மெண்ட்களிலும் காய்கறி வளர்ப்பு சாத்தியமே!

இயற்கையோடு இணைந்திருப்பது என்பது ஒரு வரம். ஆனால், மாறிவரும் அப்பார்ட்மெண்ட் கலாசாரத்தில் செடிகளை வளர்ப்பது என்பது எளி தல்ல என்றுதான் பலரும் நினைக்கிறோம். ஆனால், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி, நம் கரங்களாலேயே நமக்குத் தேவையான காய்கறி மற்றும் பழச்செடிகளை வளர்த்துப் பயன்பெறலாம்!

ADVERTISEMENT

காய்கறி வளர்ப்புக்கு அதிக இடம் தேவை இல்லை. அடுக்ககங்களில் கிடைக்கும் சிறிய இடங்களிலும் காய்கறி தோட்டம் எளிதாக வளர்க்கலாம். அதுவும், அதிக செலவின்றி வெறும் 500 ரூபாய் மட்டும் இருந்தாலே போதும். எந்த இடமாக இருந்தாலும், செடி வளர நீர், மண், பராமரிப்பு, சிறந்த தரமான உரம், சூரிய ஒளி ஆகியவை அவசியம் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

தக்காளி, புதினா, கொத்தமல்லி, கீரை வகைகள், வெண்டைக்காய், பச்சை மிளகாய் போன்ற சிறிய அளவிலான செடிகளை முதலில் பயிரிடலாம். இடம் அதிகமாக இருந்தால், அதற்கேற்ப பிற காய்கறிகளைப் பயிரிடலாம். தற்போது, அனைத்திலும் ரசாயனத்தன்மை என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆகையால், இயற்கை தன்மை மாறாத தரமான விதைகளைத் தேர்வு செய்வதில் கவனம் வேண்டும்.

தோட்டக் கலைத்துறை சார்பில், இயற்கையான காய்கறி விதைகள் கிடைக்கிறது. அவற்றை வைத்து, வீட்டுத் தோட்ட வேலையை முதலில் துவங்கலாம். பயிரிட்ட விதைகள் வளர, உரமிடுதல் அவசியம். அதுவும் இயற்கையான உரமாக இருக்க வேண்டும். வீட்டுக்கழிவுகளான முட்டை ஓடு, மத்துாள், காய்கறி கழிவுகள் போன்ற மக்கும் பொருட்களைச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம்.

இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் வலியுறுத்தும் பஞ்சகவ்யத்தைப் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தலாம். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து, தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். வேப்ப எண்ணெய்யைத் தண்ணீரில் கலந்தும் ஸ்பிரே செய்யலாம். இதனால், செடியில் உள்ள நச்சுகள் அழியும். உரம், விதை இவற்றுக்கு முன், பயிரிட பயன்படுத்தும் தொட்டி, மண் ஆகியவை மிகவும் முக்கியம். செடிகள் வளர்க்க, தொட்டி இப்படித்தான் இருக்க வேண்டும் என்றில்லை. எந்த பொருட்களிலும், மண் நிரப்பி விதைகளைப் பயிரிடலாம்.

தண்ணீர் பாட்டில்களில், கொத்தமல்லி, புதினா போன்றவற்றை வளர்க்கலாம். வீட்டின் சுவர், தொங்கும் தொட்டிகள் என எதில் வேண்டுமானாலும், செடி வளர்க்கலாம். பயிரிடும் விதைகள் நன்கு வளர மண் ஈரப்பதத்துடன் இருப்பது அவசியம். பெருநகரங்களில் நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு மாற்றுவழியாக, சமையலறையில் வீணாகும் நீர், துணி சலவைக்கு உபயோகிக்கும் நீர் ஆகியவற்றைச் செடிகளுக்கு ஊற்றலாம். நாளுக்குநாள் விலை ஏறிவரும் காய்கறிகளில், சிலவற்றையேனும் நாமே இயற்கையான முறையில் நம் வீட்டிற்குள் வளர்த்து, பண சேமிப்பையும், உடல் நலனையும் பெறலாமே!

ADVERTISEMENT

ஆரோக்கியத்துக்கேற்ற பருவகாலப் பயிர்கள்!

பச்சைக் காய்கறிகளும் பழங்களும் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை என்றாலும், சில காய்கறிகள் மற்றும் பழங்கள் குறிப்பிட்ட பருவங்களில் தான் கிடைக்கும். அதனால்தான் அந்தந்த சீசனில் கிடைப்பவற்றை சாப்பிடவேண்டுமென்று சொல்வார்கள். அதேநேரத்தில் எந்தெந்த சீசனில் அவற்றை பயிரிட வேண்டும் என்பதற்கும் சில வரை முறைகள் உள்ளன. அது வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டமாகட்டும் அல்லது வயல்வெளியாகட்டும். எதுவாக இருந்தாலும் அந்தந்த பருவத்தில் விதைப்பதே நல்லது.

கத்தரிக்காய், பாகற்காய், வெண்டைக்காய், பீர்க்கன்காய் மற்றும் தக்காளி போன்ற காய்கறிகள் எல்லா காலங்களிலும் விளையக்கூடியவை. மேலும் இவை எல்லா காலங்களிலும் மனிதர்களுக்கு தேவையானவையாகும். ஆகவே , இவற்றுக்காக சீசனை எதிர்பார்த்து காத்திருக்கத் தேவையில்லை. ஆனால், பனி மற்றும் மழைக் காலங்களில் பூச்சிகளின் தாக்குதல் இருக்க வாய்ப்புள்ளது என்பதால் அதுகுறித்த விழிப்புணர்வு இருக்கவேண்டியது கட்டாயம். செயற்கை பூச்சிக்கொல்லிகளை தெளிக்காமல் இயற்கை முறையிலேயே அவற்றை கட்டுப்படுத்த ஏராளமான வழிகள் உள்ளன.

மேலும் படிக்க: ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்

உணவே மருந்து, மருந்தே உணவு என்று சொல்லப்படும் வேளையில் நஞ்சு நிறைந்த உணவுகளை பலர் உண்டு வாழ்வை இழந்துகொண்டிருக்கிறார்கள். எனவே அதுகுறித்த விழிப்புணர்வும் அவசியம் தேவை . இப்போது நாம் எந்தெந்த காலகட்டங்களில் என்னென்ன பயிர்களை பயிரிடலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.

  • ஜனவரி மாதத்தில் கரும்பு, பூசணி, சுரைக்காய், முள்ளங்கி போன்றவற்றை பயிரிடலாம்.
  • பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் கோவைக்காய், அவரைக்காய், சூரியகாந்தி, உளுந்து, கம்பு, நாட்டுச் சோளம், பருத்தி போன்றவற்றை பயிரிடுவது சிறந்தது.
  • ஏப்ரல், மே மாதத்திலேயே கோடைகாலம் தொடங்கி விடும் என்பதால் அதற்கேற்ப பயிர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இந்தச் சூழலில் முருங்கை, தர்பூசணி ஆகியவற்றை பயிரிடுவது சிறந்தது. இவை தவிர எள், கம்பு, நாட்டுச் சோளம் போன்ற பயிர்களையும் பயிரிடலாம்.
  • ஜூன் மாதம் வெயிலின் தாக்கம் குறைந்து, மழைக்காலம் தொடங்கும் நேரமாகும். ஆகவே, அப்போது தென்னை மற்றும் காய்கறி வகை பயிர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
  • ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மழைக்காலம் தொடங்கும் என்பதால், எளிதில் அழுகிவிடாத பயிர்களை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும். எள், சூரியகாந்தி, உளுந்து, தட்டைப்பயறு, துவரை, மொச்சை, பாசிப்பயறு உள்ளிட்ட பயிர்கள் எளிதில் அழுகாது என்பதால் அவற்றை நடவு செய்யலாம். இவற்றுடன், ஓரிரு காய்கறி பயிர்களையும் விதைக்கலாம்.
  • செப்டம்பர் மாதத்தில் பயிர் வகைகளைக் குறைத்து, காய்கறிப் பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். இந்த நேரத்தில், நெல் விதைப்பைத் தொடங்கலாம்.
  • அக்டோபர் மாதம் பண்டிகை சீசன் தொடங்கும் என்பதால் சுண்டல் வகையறாக்களை தேர்ந்தெடுக்கலாம். அதாவது, பயறுவகைப் பயிர்களை தாராளமாக நடவு செய்யலாம். இதற்கு எப்போதும் மவுசு இருக்கும்.
  • நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாழை, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை தேர்வு செய்யலாம்.

எப்போதும், ஒரே வகையான பயிர்களை பயிரிடுவது சலிப்பை ஏற்படுத்தும். ஆகவே, சிறிய இடவசதி இருப்பவர்கள் அதற்கேற்ப காய்கறிப் பயிர்களுடன், பயறு வகைகளையும் சேர்த்து விதைக்கலாம். இது போன்று திட்டமிட்டு, பயிரிட்டால் எப்போதுமே ஆரோக்கியமாக வாழலாம்.

ADVERTISEMENT