விரைவாக வீட்டைச் சுத்தப்படுத்த டிப்ஸ்:
வாழும் இடத்தை அழகாக வைத்துக்கொள்ளவே அனைவருக்கும் ஆசை. ஆனால், அதைச் செய்வதில்தான் நமக்குள் ஆயிரம் யோசனைகள். காரணம், தனியொரு மனுஷியாக எவ்வளவு வேலைகள்தான் செய்வது என்ற அலுப்பு. இதிலிருந்து நீங்கள் விடுபட, விடுமுறை நாட்களில் சக உறவுகளையும் உங்கள் பணியில் சேர்த்துக்கொள்ளுங்கள். கிண்டல் கேலியுடன், ஆடிப் பாடி வேலை செய்தால் அலுப்பும் தெரியாது. வீடும் அழகு பெறும்.
மேலும் படிக்க: உணவுப்பொருட்களை வீணாக்காமல் சமைப்பது எப்படி ?
வீட்டைச் சுத்தம் செய்ய எண்ணியதும் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, யார் யார் எந்தெந்த அறைகளை சுத்தம் செய்வது எனப் பிரித்துக் கொள்வதுதான். இறுதியில் யாருடைய அறை மிகவும் அழகாக இருக்கிறதோ, அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் உங்களுக்குள்ளேயே ஒரு போட்டியை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பாருங்கள் வேலையின் வேகத்தை. எந்தெந்த அறைகளை எப்படியெல்லாம் சுத்தம் செய்வது என்று பார்ப்போமா..
முழுமையாக தூசு நீக்குதல்:
சுத்தம் செய்வதில் முதலில் கவனிக்க வேண்டியது தூசு, சிலந்தி வலை, பூச்சிகளின் எச்சம் போன்றவற்றைத் தான். அலமாரி, வீட்டின் உபகரணங்கள் என, அனைத்து பகுதிகளையும் நன்கு சுத்தம் செய்ய நீக்கும் முன் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது. கண்ணுக்குத் தெரியும் பகுதிகளை மட்டும் சுத்தம் செய்யாமல், முலை முடுக்குகளிலும் முறையாகச் சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் உள்ளறை அழகு பெறும்!
உறைகளை அகற்றுதல்:
தூசு மற்றும் ஒட்டடை அடித்த பிறகே தலையணை, படுக்கை விரிப்பு, சாப்பாட்டு மேசை விரிப்பு, அலமாரிகளில் உள்ள விரிப்புகள், இருக்கை உறைகள் என அனைத்தையும் அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். இவற்றை சோப்பு நீரில் ஊறவைத்து துவைத்து சுத்தம் செய்து உலர்த்திப் பாருங்கள். உறைகள் பளிச்சென மிளிரும் !
கண்ணாடி சுத்தம்:
டி.வி, ஃப்ரிட்ஜ், கணினியின் திரை ஆகியவற்றை லேசான அடர்த்தி கொண்ட திரவங்கள் மூலம் சுத்தம் செய்யலாம். கண்ணாடி, சுவர் கடிகாரம் போன்றவற்றை உலர்ந்த துணியால் ஒரு முறை சுத்தம் செய்துவிட்டு, பிறகு ஈரத்துணியால் துடைக்க வேண்டும். உலர்ந்த துணியைக்கொண்டு மீண்டும் துடைக்கும் போது உங்களின் அழகு முகம் அதில் ஜொலிப்பதை நீங்களே காணலாம்.
குளியலறை, கழிவறை, படுக்கையறை சுத்தம்:
எந்த ஒரு வீட்டிலும் குளியலறை, கழிவறை, படுக்கையறை இவை மூன்றும் ஈரத்தன்மை இல்லாமல் உலர்ந்து இருக்க வேண்டும். அப்போதுதான் அறைகளில் கசடுகள் சேராமல், எப்போதும் கலர்ஃபுல்லாகக் காட்சியளிக்கும். குளியலறையில் இருக்கும் அலமாரி, கழிவறை, குளியல் டப், பக்கெட் என அனைத்தையும் அவ்வப்போது தேய்த்து சுத்தம் செய்வது நல்லது. அதேபோல் கதவு , டைல்ஸ் என அனைத்தையும் வாசனை திரவியம் கொண்டு மாதம் ஒருமுறை சுத்தம் செய்தால் அறை மணக்கும். வீட்டு சுத்தம் என்பது நம் ஆரோக்கியத்துக்கு முக்கியமானது. அதை தனியாக செய்யாமல், விடுமுறை நாட்களில் அனைவரும் இணைந்து செய்யும் போது, மனை அழகு பெறுவதுடன் மனங்களிடையே மகிழ்ச்சியும் கூடும்.
வீட்டின் தூய்மை:
வீட்டின் தூய்மை என்பது வரவேற்பறை முதல் கழிவறை வரை எல்லாவற்றையும் தூய்மை வைத்திருப்பதாகும். வீட்டு தலைவாசல் முதல், ஒவ்வொரு அறை வாசலுக்கு முன்பும், மிதியடிகளை பயன்படுத்தி, கறைகள் மற்றும் கிருமிகள் உள் நுழைவதைத் தடுக்கலாம். பொருட்களை அலமாரி அல்லது ‘வால் ஷெல்ப்’ போன்ற இடங்களில், கச்சிதமாக அடுக்கி வைப்பது அழகாக இருக்கும். புத்தக அலமாரிகள், ஆடைகளுக்கான அலமாரி ஆகியவற்றை வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். புத்தக அலமாரிகளுக்கு கதவுகள் பொருத்துவது நல்லது. அதன் மூலம், அவற்றின் மீது தூசு படியாமல் தவிர்க்க இயலும்.
கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றின் கீ போர்டை ‘பட்ஸ் ‘ பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். அறையின் சுவர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள நிறங்களுக்கு பொருத்தமாக, பர்னிச்சர் வகைகளை தேர்வு செய்யலாம். பொதுவாக, பர்னிச்சர் வகைகள் வெளிர் நிறத்தில் இருப்பது, அறையின் சூழலை வெளிச்சமாக காட்டும். மேலும், வெளிர் நிறங்கள் மனதிற்கு புத்துணர்வை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: நம் வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டியவைகள்
ஜன்னல்கள், வீட்டின் கண்கள் என்று சொல்லலாம். அவற்றிற்கு பொருத்தப்படும் நவநாகரிக திரைச்சீலைகள் கண்கவர் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. அறைகளுக்கு பொருத்தமான நிறங்களில் , ‘ வெனிஷியன் பிளைன்ட்ஸ் ‘ அல்லது ‘ மேனர் ‘ போன்ற ஜன்னல்களுக்கு திரைச்சீலைகள் பரவலான பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
‘ புளோர் மேட் ‘ எனப்படும் தரை விரிப்புகள், கம்பளங்கள் ஆகியவையும் வீட்டின் அழகிற்கு, மேலும் அழகு சேர்ப்பதாக அமையும். விலை உயர்ந்த சோபாக்கள் மற்றும் ஊஞ்சல் ஆகியவற்றுக்கு பொருத்தமாக, தரையில் விரிப்புகள் அல்லது கம்பளங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி, வீட்டை அழகாக காட்டலாம். தரைத்தளத்திற்கான விரிப்பு அல்லது கம்பளத்தைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அறையின் அளவு, வண்ணம், அமைப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். வீட்டிற்கு அழகு சேர்க்கும் விதமாக, ஜன்னல் ஓரங்களில், அதிக ஆக்சிஜன் வழங்கும் கற்றாழை , மணி பிளான்ட் போன்ற செடிகளை வளர்க்கலாம்.
ஜன்னல் கம்பிகளில் உள்ள கறைகளை போக்க,‘ பிளாக் டீயை ‘ பயன்படுத்தலாம். உயரமான பொருட்களை ஜன்னலுக்கு அருகில் வைத்து, அறைகளுக்குள் பரவும் வெளிச்சத்தை தடை செய்து விடக்கூடாது. படுக்கை அறையில், அடிக்கடி கட்டில், மெத்தைகளை சுத்தம் செய்ய வேண்டும். தலையணைகளுக்கு, பெரிய பூக்கள் அல்லது பிரிண்ட் செய்யப்பட்ட உறைகள் பொருத்தமாக இருக்கும். ஒரே நிறம் மற்றும் டிசைன்கள் கொண்ட உறைகளை நீண்ட நாட்கள் பயன்படுத்தக்கூடாது. வெவ்வேறு வண்ண உறைகளை பயன்படுத்துவது, மனதிற்கு புத்துணர்வை அளிக்கும்.
சமையலறை தூய்மை:
மின் விளக்குகள், எல்.இ.டி விளக்குகளாக இருப்பதே நல்லது. அதனால், அதிக வெளிச்சம் கிடைப்பதுடன், அறையும் அழகாக தோற்றமளிக்கும். சமையலறை எப்போதும் தூய்மையாக இருப்பது அவசியம். கிருமிகள் அதிகமாக பரவும் இடங்களில் சமையலறையும் ஒன்று. எறும்புகள், சிறு பூச்சிகளின் நடமாட்டத்தைத் தடுக்க, நீரில் சிறிது மண்ணெண்ணெய் கலந்து தரைத்தளத்தை துடைக்கலாம். பாத்திரங்களை எலுமிச்சை மற்றும் உப்பு கலந்து துலக்கும் போது, கறைகள் நீங்குவதோடு, கிருமிகளை அழிக்கவும் உதவும்.
குளியலறை மற்றும் கழிவறைகளில் உள்ள ஈரப்பதம் காரணமாக, நோய்த் தொற்று எளிதாக ஏற்படக்கூடும். அதன் நுழைவுவாசலில் மிதியடிகளை பயன்படுத்துவது அவசியம். கழிவறைகளை சுத்தப்படுத்த ரசாயனப் பொருட்களுக்குப் பதிலாக, இயற்கை தயாரிப்புகளை பயன்படுத்துவதே நல்லது.
வீட்டை பராமரிக்கும் வழிகள்:
வீடு என்பது வெறும் மண், செங்கல்களால் ஆன, ஓர் உயிரில்லாத பொருள். அதை முறையாகப் பராமரிப்பதன் மூலம், அதற்கு ‘ இல்லம் ‘ என்கிற உணர்வுரீதியான அந்தஸ்து கிடைக்கிறது. அந்த அளவிற்கு, வீட்டு பராமரிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நம் வீட்டில் உள்ள அறைகளையும், பொருட்களையும், கிருமியின்றி சுத்தத்துடன் பராமரிக்கும் முறைகளை, இங்கு காண்போம்.
மேலும் படிக்க: உணவும் ஆரோக்கியமும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது
கூடம்:
கைப்பிடி அளவு வேப்பிலையை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதை தண்ணீரில் கலந்து, வடிகட்டவும். உப்பு மற்றும் சிறிது பொடித்த கற்பூரத்தை, அத்துடன் சேர்க்க வேண்டும். அந்த நீர்க்கலவையில் ஒரு பருத்தி துணியை நனைத்து, ஜன்னல் கம்பிகள், ஓரங்கள், நிலைகளில் துடைத்தால், பூச்சி, கொசு, கரையான் முதலான தொல்லைகள், அறவே இருக்காது. ஒரு பாட்டிலின் மூடியில் சிறு துளைகள் போட்டு, அந்த பாட்டிலுக்குள் அதே நீர்க்கலவையை நிரப்பவும். இப்பொழுது, பாட்டிலை அழுத்தி, அந்த நீரை தரையில் ஸ்ப்ரே செய்து மாப் போடலாம். அவ்வாறு செய்தால், வீடு துடைக்கும் பொழுது, வாளியில் தண்ணீர் எடுத்து, குனிந்து, பிழிந்து சிரமப்பட வேண்டிய அவசியம் இருக்காது.
உணவு உண்ணும் இடம்:
வாஷ்பேஸின் அடைப்பு பிரச்சினை நீங்க, முட்டை ஓட்டை நன்றாக பொடித்து, வாஷ்பேஸின் ஓட்டையிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் தூவி விட வேண்டும். பின் மறுநாள் காலையில், அதிக அழுத்தம் கொடுத்து நீரை, அந்த பகுதியில் ஊற்றவும். இதனால், அந்த ஓட்டையில் அடைந்திருக்கும் பாசான் அழுக்கு போன்றவை, சுத்தமாக வெளியேறிவிடும்.
சமையலறை:
சமையலறை எண்ணெய் பிசு பிசுப்பு நீங்க வினிகர், உப்பு, கற்பூரம் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து, சோப் ஆயில் வைத்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இம்முறையைப் பின்பற்றினால், எண்ணெய்ப் பசை நீங்கி, இடம் பளிச்சென்றிருக்கும்.
படுக்கையறை:
படுக்கையறை மரசாமான்களில் கரையான் அரிக்காமல் இருக்க ஒரு எலுமிச்சை அளவு கற்பூர கட்டியை பொடியாக்கி, அரை லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். பின் அந்த நீரை, கட்டில், மேஜை, ட்ரெஸ்ஸிங் டேபிள் முதலான மர சாமான்கள் மீதும், அருகிலும் தெளித்துவிட்டால், வெகு நாட்களுக்கு கரையான் அருகில் அண்டாது.
கழிப்பறை:
கழிப்பறை டைல்ஸ் இடுக்குகளிலிருக்கும் அழுக்கை நீக்க ஒரு லிட்டர் தண்ணீரில், ஒரு மூடியளவு வினிகரையும், ஒரு கையளவு உப்பையும் கலந்து கொள்ள வேண்டும். அந்த நீரை கழிப்பறை டைல்ஸில் ஊற்றி விட்டு, சிறிது நேரம் கழித்து சோப் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். டைல்ஸ் இடுக்குகளிலிருக்கும் அழுக்குகள், அறவே மறைந்துவிடும்.
இல்லம் மணக்க எளிய டிப்ஸ் !
வீட்டை எவ்வளவு அழகாகக் கட்டினாலும், வீட்டுக்குள் நறுமணம் வீசினால்தான் அங்கு இருப்போரின் மனம் ஆனந்தப்படுவதுடன் அமைதியும் பெறும். அந்த ஆனந்தமும் அமைதியும்தான் வீட்டை மேலும் அழகுபடுத்தும். உறவுகளின் ஒற்றுமைக் கூடாரமாக விளங்கும் உங்கள் வீடு எப்போதும் மணக்க, இதோ சில டிப்ஸ்.
நறுமணத்தை வெளிப்படுத்தும் ஆயில் டிப்யூஸர்களில் நீரை நிரப்பி அதில் உங்களுக்குப் பிடித்த மணமுடைய வாசனைத் திரவியத்தை இரண்டு துளிகள் விட்டுக் கலக்கவும். அவற்றை அப்படியே திறந்து வைத்தால் அவை காற்றோடு கலந்து வீடு முழுவதும் வாசனையைப் பரப்பும். லாவண்டர் வாசனையே பெரும்பாலும் இதில் பயன்படுத்தப்படுகிறது. சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்த எலுமிச்சை மற்றும் திராட்சை மணமுடைய திரவங்களும் மிகச்சிறப்பாக வேலை செய்யும். இது, பிற துர்நாற்றங்களை வீட்டினுள் பரவ விடாமல் தடுக்கும்.
மேலும் படிக்க: பெண்களின் உடலில் உள்ள சில அதிசயங்கள்
உங்கள் வீட்டில் இருக்கும் மின் விளக்குகளைப் பயன்படுத்தி வீட்டை மணக்க வைக்கலாம். விளக்குகளை அணைத்துவிட்டு வெனிலா மணமுடைய வாசனைத் திரவத்தை விளக்குகளில் பூசி விடவும். பிறகு விளக்குகளை ஒளிரச் செய்தால் அவை சூடேற சூடேற வாசனையும் அறை முழுவதும் பரவும். மூலிகைகளில் புதினா மற்றும் எலுமிச்சைப் புல்லில் நல்ல நறுமணம் வீசும். எனவே, இந்த மூலிகை உலரவைத்து, கிண்ணத்தில் போட்டு வீட்டின் மூலை முடுக்குகளில் வைக்கலாம். இது புதுமையான நறுமணத்தைத் தரும் .
உலர் இலைகளான ரோஸ்மேரி மற்றும் சேஜ் போன்றவற்றில் இயற்கையாகவே நல்ல நறுமணம் உள்ளது. எனவே, இந்த இலைகளை உலரவைத்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளலாம். விருந்தினர்கள் வரும் போது, வீட்டின் படுக்கைகள் மற்றும் ஜன்ன ஓரங்களில் தூவினால் போதும் , பரவும் நறுமணத்தால் விருந்தினர் அசந்தே போவர் ! ரோஜாவை வெயிலில் நன்கு உலரவைத்து, அதை குடுவை அல்லது கிண்ணத்தில் போட்டு, அதன் மேல் சிறிது லாவண்டர் எசன்ஸ் தெளித்து வீட்டில் வைத்து விட்டால், வீடு கமகமக்கும்.
பழங்களில் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுப் பழத்தின் தோல் நல்ல வாசனை கொண்டது. எனவே, அவற்றின் தோல்களை நறுக்கி சிறு பாத்திரத்தில் போட்டு வீட்டின் ஜன்னல், கதவுகளின் அருகில் வைத்தால், வீட்டில் உள்ள துர்நாற்றம் நீங்கி நறுமணம் நான்கு புறங்களிலும் வீசும்.