ADVERTISEMENT

பெண்களுக்கான சில மருத்துவ குறிப்புகள்

பெண்களுக்கான மருந்து திருநீற்றுப் பச்சிலை!

நீங்கள் ஜிகர்தண்டா குடித்திருக்கிறீர்களா? ஆம் என்றால், அதில் உடல் குளிர்ச்சிக்காகப் போடப்படும் சப்ஜா விதைகளையும் பார்த்திருப்பீர்கள். அந்த சப்ஜா விதைகள் வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் தன்மையுடையவை. சப்ஜா விதைகளை உற்பத்தி செய்யக்கூடிய திருநீற்றுப் பச்சிலை, மிகவும் வாசனை மிகுந்தது. துளசி இனத்தைச் சேர்ந்த இது, தெய்வீக மூலிகையாக விளங்குகிறது.

வெண்மை நிறத்தில் அதிகளவு பூக்களை உற்பத்தி செய்யும் இந்தச் செடி இருக்கும் இடங்களை நாடி தேனீக்கள் பறந்துவரும். இந்த இலையைக் கசக்கி முகர்ந்தால் தலைவலி, நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகிவிடும். வாந்தியை நிறுத்துவதில் இது மிகச்சிறந்த மருந்து. ரத்த வாந்தியைக்கூட கட்டுப்படுத்தக்கூடியது.

மேலும் படிக்க: சில எளிய மருத்துவ குறிப்புகள்

திருநீற்றுப் பச்சிலையில் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடென்ட், பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் நிறைந்துள்ளன. இதில் மிகக் குறைந்த கலோரிகள் உள்ளன. பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் இருக்கின்றன. இவைமட்டுமல்லாது சிட்ரால், சிட்ரோனெலால், ஜெரானியால் போன்ற ஏராளமான மூலப்பொருள்களும் இதில் இருக்கின்றன. தலையில் பேன் மற்றும் பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் இந்த இலையின் சாற்றை தனியாகவோ அல்லது எண்ணெய் கலந்தோ தேய்த்துக் குளித்தால் பேன், பொடுகுத் தொல்லைகள் போய்விடும்.

பருவ வயது உடையவர்களுக்கு முக்கியப் பிரச்சினையே பருக்கள்தான். சிலருக்கு, முகத்தில் க்ரீம்களைப் போடுவதால் பரு இருந்த இடம் புண்ணாகிவிடும், கரும்புள்ளிகளும் வந்துவிடும். அத்தகைய பிரச்சினைகளுக்கு இந்த இலையைக் கசக்கி முகத்தில் தடவினால் போதும், பருக்கள் காணாமல் போய்விடும். திருநீற்றுப் பச்சிலையின் விதையை கஷாயம் வைத்துக் குடித்தால் சுறுசுறுப்பு கிடைப்பதோடு சிறு நீரகக் கோளாறுகளும் சரியாகும். அதுமட்டுமன்றி மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், உடல் உஷ்ணம் போன்றவற்றிற்கு திருநீற்றுப் பச்சிலை மிகச் சிறந்த மருந்து.

ADVERTISEMENT

இலைச் சாற்றுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்பு வலி , இருமல், வாயு பிரச்சினைகள் சரியாகும். காது வலி, காதில் சீழ் வடிதல் போன்றவற்றுக்கும் இந்த இலைச்சாறு கண்கண்ட மருந்து. திருநீற்றுப் பச்சிலையின் இலைகள், பூக்கள், விதைகள் ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து ஆரோக்கிய மூலிகைக் குளியல் போடலாம். இதனால் படை, தேமல் போன்ற தோல் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

அழகை மெருகூட்டும் தேன்!

இனிப்பு நிறைந்த தேன் மருத்துவக் குணங்களோடு, அழகு தரும் பொருளாகவும் இருக்கிறது. அடர்த்தி நிறைந்த தேனில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருக்கிறது. இளமையை மீட்டுத்தரும் தேன், முகத்தில் முகப்பரு, பருக்களால் பள்ளம், சிறுசிறு சுருக்கங்கள், உஷ்ணகட்டிகள், தேமல் போன்றவற்றைச் சரிசெய்யும்.

தேனை கொண்டு செய்யும் சில அழகு குறிப்புகள் உங்களுக்காக:

கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது வறண்ட சருமத்தை மிருதுவாக்கும். வறண்ட சருமம் இருப்பவர்கள், திராட்சை அரைத்த விழுது, தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேஸ் பேக்காக போடலாம். நன்றாகக் காய்ந்ததும் இளஞ்சூடான நீரில் கழுவவும். இதனைத் தொடர்ந்து செய்துவந்தால் மிருதுவான சருமம் கிடைக்கும்.

தேனுடன் சம அளவு காபி பொடியையும் கலந்து, நமது உடலில் வெயில் பட்ட இடங்களில் தடவ வேண்டும். உலர்ந்தவுடன் மிதமான நீரில் கழுவவும். இது சருமத்துக்குப் பளபளப்பையும் , புத்துணர்வையும் தரும். முகத்தில் கரும்புள்ளிகள், பருக்களால் வந்த பள்ளங்கள், தழும்புகள் போன்ற பிரச்சினைகளுக்குத் தேனை தினசரி பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க: உடல் ஆரோக்கியத்திற்கு சில குறிப்புகள்

ADVERTISEMENT

தேவையான அளவு தேனுடன் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதைக் கண்களுக்குக் கீழ் கருவளையம் வரக்கூடிய பகுதி, கன்னம், தாடை, மூக்கு நுனி, உதடு என முகத்தில் எல்லா இடங்களிலும் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து மிதமான நீரில் முகத்தைக் கழுவவும். தேன் முகத்துக்குத் தேவையான ஈரப்பதத்தைத் தருவதோடு வறட்சியிலிருந்து காக்கும். பருக்கள் வராமல் தடுக்கும். பருக்களால் உண்டாகும் தழும்புகளை போக்கும்.

தேனுடன் சமஅளவு கெட்டித்தயிரை கலந்து வெயில்படுவதால் சருமம் கருத்திருக்கும் இடங்களில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து மிதமான வெந்நீரில் கழுவலாம். தினமும் இதைச் செய்து வந்தால் ஒரே மாதத்தில் சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்பட்ட கருமை மறைந்து பழைய பொலிவு கிடைக்கும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இரட்டிப்பு பலன் தரும். சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துச் சருமத்தை வறட்சியிலிருந்து நீக்க உதவும்.

ஜொலிக்கும் அழகு தரும் விளக்கெண்ணெய்!

ஆமணக்கு விதையில் இருந்து தயாரிக்கப்படும் ‘விளக்கெண்ணெய்’ மருத்துவ குணங்கள் கொண்டது. பாரம்பரியமான மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. விளக்கெண்ணெய்யை தினமும் தூங்கச் செல்லும் முன், கண்களைச் சுற்றிலும் தடவிக்கொண்டு படுத்தால் கண் எரிச்சல் குணமாகும். குளிப்பதற்கு முன், விளக்கெண்ணெய்யை உடலில் தடவிக்கொண்டு குளித்தால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். விளக்கெண்ணெய்யில் உள்ள புரத மூலக் கூறு, முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. முகப்பருக்களின் மீது விளக்கெண்ணெய்யை தொடர்ந்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். விளக்கெண்ணெய்யில் உள்ள

‘ ரிகினோலிக் அமிலம் ‘ சருமத்தில் உள்ள வீக்கம், புண்களை குணமாக்கும் சக்தி படைத்தது. சருமத்தில் ஏற்படும் சிவப்பு, தடிப்பு, அரிப்பு போன்ற பாதிப்புகளுக்கும், பூஞ்சை தொற்றுக்கும், விளக்கெண்ணெய்யை சிறிதளவு தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் தடவி வரலாம். 2 டீஸ்பூன் விளக்கெண்ணெய்யில், சுத்தமான பருத்தித் துணியை நனைத்து, முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்து, இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவலாம். இது சருமத்துக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய்யை சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். தேங்காய் எண்ணெய்யில் சில துளிகள் விளக்கெண்ணெய்யை சேர்த்து தினமும் தலைமுடிக்குத் தடவி வருவதால், உடல் உஷ்ணம் குறையும். கூந்தல் மிருதுவாகவும், மினு மினுப்புடனும் இருக்கும்.

மேலும் படிக்க: முதுமையைத் தடுக்கும் முத்தான வழிகள்

ADVERTISEMENT

விளக்கெண்ணெய் , ஆலிவ் எண்ணெய் , எலுமிச்சைசாறு மூன்றையும் கலந்து முடியின் வேர்ப்பகுதியில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு குளிக்கலாம். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால் தலையில் இருக்கும் பொடுகு நீங்கும். முடி உடையாமல் செழித்து வளரும். விளக்கெண்ணெய்யில் உள்ள ஒமேகா 9 கொழுப்பு அமிலம் முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து, கூந்தலின் வளர்ச்சியையும், அடர்த்தியையும் அதிகரிக்கும் தன்மை கொண்டது. வாரம் ஒரு முறை விளக்கெண்ணெய்யை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கூந்தலில் ஏற்படும் வறட்சி குறையும். தினமும் இரவு படுக்கப்போகும் முன்பு கண் இமைகளில் விளக்கெண்ணெய்யை தடவி வரலாம். இவ்வாறு செய்வதால் இமைகள் அழகு பெறும். பாதங்களில் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் தூங்கச் செல்வதற்கு முன், வெடிப்புகளின் மீது விளக்கெண்ணெய்யை தடவினால் பித்த வெடிப்பு குணமாகும்.

உடலை ஃபிட்டாக்கும் பேலியோ டயட்(Paleo Diet)

‘ பேலியோ டயட் ‘ என்கிற உணவு முறை, மனித உடலின் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இந்த உணவு முறை, கிட்டத்தட்ட 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது. மனிதர்கள் காடுகளில் கூட்டமாக வாழ ஆரம்பித்த காலங்களில், விலங்குகளை வேட்டையாடி சுட்டு சாப்பிட்டு வந்தனர். மனிதர்கள் விவசாயம் செய்வதற்கு முன் எடுத்துக்கொண்ட மாமிச உணவுகளை இது பரிந்துரைக்கிறது.

பேலியோ உணவின் நோக்கம், ஆதிமனிதர்கள் சாப்பிட்டதைப் போன்ற உணவு முறைக்கு மாறுவதாகும். விவசாய நடைமுறைகளுடன் தோன்றிய நவீன உணவுக்கு மனித உடல் மரபணுரீதியாகப் பொருந்தவில்லை. பால், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை மனித உணவில் கூடுதல் உணவாக நிறுவியது விவசாயம். இந்தப் பொருத்தமின்மையால் உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் வருவதாக நம்பப்படுகிறது.

உடல் பருமன்தான் மற்ற நோய்களுக்கான தொடக்கம். பருமனாக இருப்பவர்கள் உயரத்திற்கேற்ற உடல் எடையுடன் இருக்க இந்த உணவு முறையைப் பின்பற்றலாம். இதனால் உடல் பலம் பெறுவதுடன் அகத்தின் அழகும் முகத்தில் வெளிப்படும்.

மேலும் படிக்க: உங்களை நீங்களே மெருகேற்ற வேண்டும்

ADVERTISEMENT

உணவு முறைகள்:

பழங்கள், காய்கறிகள், உலர் பழங்கள், இறைச்சிகள் குறிப்பாக தாவரங்களை உட்கொள்ளும் விலங்குகள், மீன், ஆலிவ் எண்ணெய், பாதாம் பருப்புகள், அதிக புரதச்சத்து, கொழுப்புச்சத்துமிக்க உணவுகளை பேலியோ உணவு முறை பரிந்துரைக்கிறது.

எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?

கோதுமை, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்ற தானியங்கள், பருப்பு வகைகள், பீன்ஸ், பயறு, வேர்க்கடலை மற்றும் பட்டாணி, பால் பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, உப்பு, உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய்யில் பொரித்த / வறுத்த உணவுகள்.

மாதிரி உணவு அட்டவணை:

காலைஉணவு:-

  • சால்மன் மீன் அல்லது பாதாம் பருப்பு, பட்டர் டீ

மதிய உணவு:-

  • இறைச்சி மற்றும் சாலட் ( கேரட், வெள்ளரி, தக்காளி, அக்ரூட் பருப்புகள் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்தது )

இரவு உணவு: –

ADVERTISEMENT
  • இறைச்சி, வேகவைத்த ப்ரோக்கோலி, சாலட் ( கலப்புக் கிரைகள், தக்காளி, வெண்ணெய், வெங்காயம், பாதாம் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்தது ) மற்றும் இனிப்புக்கான ஸ்ட்ரா பெர்ரி.

இந்த பேலியோ உணவு முறை பற்றி நடத்திய ஆராய்ச்சியில், ‘ இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. உடலின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. உடலில் கெட்டக் கொழுப்பின் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எலும்புகளை பலப்படுத்துகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. ஆரோக்கியமான வாழ்வியலுக்கு வழி வகுக்கிறது என அறிய முடிந்தது. பேலியோ டயட், ஃபேன்டசியான டயட் மட்டுமல்ல, ஃபிட்டான டயட்டும் கூட!

ஒற்றைத் தலைவலியை போக்கும் பாட்டி வைத்தியம்

மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலியின் தாக்குதலை சமாளிப்பது மிகவும் கடினமானது. தலையின் ஒரு பக்கத்தில் தீவிரமான வலி, குமட்டல், வாந்தி, மன உளைச்சல் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். ஒற்றைத் தலைவலி ஆண்களை விட பெண்களை அதிகம் தாக்கும் நோயாகும். பார்வைக் கோளாறு, கழுத்து மற்றும் தோள்மூட்டுப் பகுதியில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு, பேச்சில் தடுமாற்றம், நுகரும் திறன் குறைதல், உடலின் நெகிழ்வுத்தன்மை குறைதல் போன்ற விளைவுகளும் ஒற்றைத் தலைவலியால் ஏற்படலாம். அதிக நேரம் வெயிலில் இருப்பது, வேலைப்பளு, அலைச்சல் போன்றவற்றால் ஏற்படும் சோர்வுகூட ஒற்றைத் தலைவலிக்கு காரணமாக இருக்கலாம். பாரம்பரியமான பாட்டி வைத்தியத்தில் இதற்கு பல தீர்வுகள் உள்ளன. அவற்றில் ஒரு சில குறிப்புகள் இதோ…..

கற்பூரத்தை, வெற்றிலைச்சாறு சேர்த்து அரைத்து, தலையில் பற்றுப்போட ஒற்றைத் தலைவலி நீங்கும். பூண்டு, வசம்பு, மிளகு மூன்றையும் நன்றாகத் தூள் செய்து சிறிது தாய்ப்பாலுடன் குழைத்து, மெல்லிய துணியில் முடிந்துக்கொள்ள வேண்டும். அதை நெற்றியின் மேல் பற்று போட்டால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.

மேலும் படிக்க: சரும ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் சில குறிப்புக்கள்

கரிசலாங்கண்ணி, ரோஜாப்பூ, மருதோன்றி இலை, நல்லெண்ணெய் சேர்த்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு, வெள்ளைநிற பருத்தித்துணியால் பாத்திரத்தை மூடி ஊற வைக்கவும். அதனை ஏழு நாட்கள் வெயிலில் வைத்து, வடிகட்டி தலைக்குத் தேய்த்து வந்தால் ஒற்றைத் தலைவலி நீங்கும். மேலும் பொடுகு, புழு வெட்டு, இளநரை பிரச்சினைகளும் சரியாகும். நல்லெண்ணெய்யில் சடாமாஞ்சில் மூலிகையைச் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி தலைக்கு தேய்த்தால் ஒற்றைத் தலைவலி தீரும்.

ADVERTISEMENT

சித்திரமூல வேர்ப்பட்டை, சோம்பு, அதிமதுரம் ஆகியவற்றை பொடியாக்கி, அத்துடன் மூன்றில் ஒரு பங்கு சர்க்கரை சேர்க்கவும். இந்தப் பொடியை ஐந்து கிராம் அளவு எடுத்து, வெந்நீரில் கலந்துப் பருகி வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும். எலுமிச்சைத் தோலை நன்கு காய வைத்து, அரைத்து, நெற்றியில் பற்றுப் போட்டால் ஒற்றைத் தலைவலி படிப்படியாக குறையும்.

குளிர்ந்த நீரில் பருத்தித் துணியை நனைத்து தலையிலும், கழுத்திலும் கட்டிக்கொள்ளவும். அதேநேரம் கைகளையும், கால்களையும் இளஞ்சூடான நீரில் வைக்கவும். ஒற்றைத் தலைவலி ஏற்படும் போது இதை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். வாரம் இருமுறை, தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து குளித்துவர தலைவலி குறையும். தலைவலி ஏற்படும்போது இளஞ்சூடான நீரில் குளிக்கலாம் . இதன் மூலம் ஒற்றைத் தலைவலி குறைவதுடன் புத்துணர்வும் உண்டாகும்.