சரும ஆரோக்கியத்துக்கு வாழையிலை:
வாழை இலையில் உடலுக்கு நன்மை தரும் பல்வேறு சத்துக்கள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவைத் தவிர சரும ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் வாழை இலையை பயன்படுத்தலாம் என்பதை இங்கே காண்போம்.
சரும பிரச்சினைகளான பொடுகுத் தொல்லை, சொறி, சிரங்கு மற்றும் தீப்புண் போன்றவற்றிற்கு, வாழையிலையை அரைத்துப் பூசி வந்தால், நல்ல பலன் கிடைக்கும். வடிகட்டிய வாழையிலை சாற்றினை குளிர்பதனப் பெட்டியில் உறைய வைத்து ஐஸ் கட்டியாக்கி, அதனை சருமத்தில் தேய்த்தால், சருமம் மென்மையடையும்.
வாழையிலையில் அழகைக் கூட்டும்:
‘ அலட்டாயின் ‘ எனும் சத்து உள்ளது. அரைத்த வாழையிலையுடன் தயிர் அல்லது பன்னீர் சேர்த்து சருமத்தில் பூசி வந்தால், சரும பொலிவு அதிகரிக்கும். மேலும், வாழையிலையில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இவை சருமப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வயதான தோற்றம் பெறுவதை தடுக்கின்றன. வாழையிலை சாற்றை தலையில் தடவி குளித்து வந்தால், பொடுகு தொல்லை நீங்கும். வெயிலினால் சரும பாதிப்பு ஏற்பட்டு இருந்தால், அந்த இடத்தில் வாழை இலை விழுதை தடவினால் விரைவாகவே குணமாகும்.
ஆரஞ்சு பழமும் அழகும்:
ஆரஞ்சு பழம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, அழகையும் அதிகரிக்கிறது. தூக்கமின்மையால் ஏற்படும் கண் சோர்வை நீக்க, ஆரஞ்சு சாற்றினை குளிர்பதனப் பெட்டியில் உறைய வைத்து ஐஸ் கட்டியாக்கி, அதை கண்களில் ஒத்தடம் கொடுத்தால் , கண்கள் புத்துணர்வோடு பளிச்சென்று ஆகிவிடும். ஆரஞ்சு தோலைக் காய வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியுடன், முல்தானிமெட்டி, சந்தனம் ஆகியவற்றை சம அளவு எடுத்து , தயிருடன் கலந்து முகத்தில் தடவி, 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இப்படிச் செய்து வந்தால், முகம் பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸ், பன்னீர் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க: உணவும் ஆரோக்கியமும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது
ஒரு சிலருக்கு கன்னம், கழுத்து போன்ற பகுதிகளில் திட்டுத் திட்டாக கருப்பாக இருக்கும். வேப்பங்கொழுந்து, ஆரஞ்சு தோல், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை அரைத்து கருமை உள்ள இடங்களில் பூசி, 5 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கருமை விரைவில் மறையும். சிலருக்கு முகத்தில் பருக்களால் ஏற்பட்ட கரும்புள்ளிகள் இருக்கும். ஆரஞ்சு தோல் பொடி, கசகசா, சந்தனப் பொடி மூன்றும் சேர்த்து, பன்னீரில் கலந்து தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வரவேண்டும். ஒரு மாதத்தில் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.
உடனடி சரும பொலிவு தரும் எலுமிச்சை !
கொளுத்தும் வெயிலில் வெளியில் செல்பவர்களுக்கு மட்டுமே சருமத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால், ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள் இருந்தாலும் பல்வேறு காரணங்களால் சரும பாதிப்புகள் ஏற்படலாம். வெப்பம், வியர்வை, உடலின் நீர் வறட்சி மற்றும் மின்விளக்கு வெளிச்சம் போன்றவற்றாலும் பாதிப்பு வரலாம். இதை தடுக்க எலுமிச்சையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் எளிய அழகு குறிப்புகள்.
எலுமிச்சை சாறுடன் தயிர் அல்லது முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து முகத்தில் தடவி, பத்து நிமிடங்கள் உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவலாம். தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வர முகத்தில் உள்ள கருமை நீங்கி பொலிவடையும். ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து தேய்த்தால் சருமம் பளபளக்கும். பாலில் எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வர சூரிய ஒளியால் ஏற்படும் கருமையான சரும நிறம் மாறும்.
முதல் நாள் இரவு எலுமிச்சை சாருடன் பாலாடை சேர்த்து வாற வைத்து, மறுநாள் காலை அந்த கலவையை தடவி , உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் குளித்தால் சருமத்தின் நிறம் மேம்படும். எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் ‘ மாஸ்க் ‘ போன்று தடவினால் சருமத்தின் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி மென்மையாகும். பால் பவுடரில், எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, சில நிமிடங்கள் ஊற வைத்து முகத்தில் ‘ மாஸ்க் ‘ போன்று தடவலாம் . முதல் நாள் இரவில் ஓட்ஸை ஊறவைத்து, மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் செய்து, அதில் எலுமிச்சை சாறு மற்றும் புளித்த தயிரைக் கலந்து சருமத்தில் தடவினால், அழுக்கு மற்றும் மாசு ஆகியவற்றை அகற்றி புத்துணர்வை தரும்.
மேலும் படிக்க: முதுமையைத் தடுக்கும் முத்தான வழிகள்
எலுமிச்சை தோலை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, அதில் ஒரு ஒரு ஸ்பூன் எடுத்து, கால் ஸ்பூன் கிரீன் டீ இலை மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவலாம். அதனால் எண்ணெய் பிசுபிசுப்பு அகன்று முகம் குளிர்ச்சி பெறுவதால் முகப்பரு வராது.
கடலை மாவு மற்றும் எலுமிச்சைப் பொடி ஆகியவற்றை சம அளவு எடுத்து, சிறிதளவு நீருடன் கலந்து முகத்தில் பூசலாம். எலுமிச்சை பொடி, சந்தனப் பொடி மற்றும் கற்றாழை ஜெல் மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவலாம். இவை வறட்சியை நீக்கி, எண்ணெய் சுரப்பை குறைக்கச் செய்வதால் மென்மையான மற்றும் பளிச்சென்ற சருமம் கிடைக்கும்.
முகப்பரு நீங்க எளிய வழிகள்:
அழகாக மேக்கப் செய்திருந்தாலும், முகப்பருக்கள் காரணமாக இமேஜ், டேமேஜ் ஆகும் சங்கடம் பலருக்கும் ஏற்பட்டு விடுகிறது . வயது வரம்பின்றி தோன்றும் முகப்பருக்களை அகற்ற தரமான கிரீம் வகைகளை தேடிப்பிடித்து பயன்படுத்தினாலும், பலன்கள் ஏதுமில்லையா…? இதோ, இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி, பருக்களை அகற்ற உதவும் சில தீர்வுகளை பார்ப்போம்.
தோலுக்கு அடியில் அமைந்துள்ள ‘ செபேஷியஸ் ‘ சுரப்பிகளில் இருந்து, ‘சீபம் ‘ என்னும் எண்ணெய் பொருள் சுரக்கிறது. இது சருமத்தை மினுமினுப்பாகவும், மிருதுவாகவும் வைக்க உதவுகிறது. மாசு மற்றும் தூசு இந்த எண்ணெய் பொருளில் படிந்து சருமத்தில் உள்ள துளைகளை அடைத்துக்கொள்கிறது. இதனால் தோலுக்கடியில் சுரக்கும் சீபம் வெளிவர முடியாமல் தேங்கி நிற்கும். இதில் பாக்டீரியா போன்ற கிருமிகளால் தொற்று ஏற்பட்டு, சருமத்தில் பருக்கள் தோன்றுகின்றன. உடனடியாக அவற்றை கிள்ளி எறிய பலருடைய கைகள் துடிக்கும். ஆனால், அவ்வாறு செய்யக்கூடாது. அவற்றை கிள்ளிவிட்டால் புண்ணாகி விடும். அவற்றின் மேல், புதினா இலைகளை அரைத்து தடவலாம்.
முகத்தில் தோன்றும் கட்டிகளின் மீது புற்று மண்ணை தடவும் பழக்கம் பழங்காலம் முதலே இருந்து வந்துள்ளது. தற்போது அதற்காக தரமான களிம்புகள் கிடைக்கின்றன. கட்டிகள் உருவாகுவதற்கு முக்கிய காரணம். கிரீம் வகைகள் மற்றும் பவுடர் ஆகியவற்றை அடிக்கடி தடவுவதாகும். அவை, சருமத்தில் வியர்வையுடன் தங்கி, அழுக்காக மாறி தோலில் கட்டியை ஏற்படுத்துகின்றன. இந்த சிக்கலுக்கு எளிதான தீர்வு குளிர்ந்த நீரால் அடிக்கடி முகத்தை கழுவுவதாகும்.
மேலும் வேப்பிலை பொடியுடன், மஞ்சள் தூள், சந்தனம் சேர்த்து நீர்விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி வரலாம். அருகம்புல் சாறு, பன்னீர், பப்பாளி ஆகியவற்றை சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, உலர்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவலாம். இது, சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட கருமையை அகற்றுவதுடன், முகப்பருக்களையும் மறையச் செய்யும். வேப்பிலை பொடி, புதினா பொடி, துளசிப் பொடி ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து, மிதமான நீரில் குழைத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இம்முறையை தொடர்ந்து 5 நாட்கள் செய்தால் பருக்கள் மறையும். இந்த கலவையை கண்களுக்கு கீழ்ப்புறம் தடவக்கூடாது.
தேன் மெழுகையும், சர்க்கரையையும் சேர்த்து குழைத்து முகப்பருக்களின் மீது தடவி வர, பருக்கள் விரைவில் மறைந்து முகம் பளபளக்கும். நான்கு துளசி இலை, சிறிதளவு வேப்பந்தளிர், ஒரு டீஸ்பூன் கடலை மாவு, அரை மஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து, பருக்களின் மீது தடவி, 5 நிமிடங்கள் கழித்து மிதமான சுடுநீரில் முகத்தைக் கழுவினால், சருமம் மிருதுவாகி பருக்களும் மறையும்.
அருகம்புல் பொடி, குப்பை மேனி இலைப்பொடி இரண்டையும் சம அளவு எடுத்து கலக்கி, இரவில் பருக்களின் மீது தடவி, காலையில் முகத்தை கழுவவும். ஒரு வாரம் தொடர்ச்சியாக இம்முறையை கடைப்பிடித்தால் பருக்கள் அகன்று முகம் மிளிரும், ஊமத்தம் பூக்களை நசுக்கி, பருக்களின் மீது பற்று போடுவதாலும், எலுமிச்சை இலைகளை அரைத்து பருக்களின் மீது தடவுவதாலும் முகம் பளபளப்பாகும்.
ஆவாரம் பூ ; முக அழகுக்கு ஆதாரம் !
“ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ” எனும் பழமொழி கேள்விப்பட்டிருப்போம். அத்தனை நன்மைகளைத் தரக்கூடியது ஆவாரம் பூ. ஆவாரை, துவர்ப்பு மற்றும் குளிர்ச்சியான தன்மையுடையது. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி விடும். சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும். தோல் வறட்சியை சரி செய்யும். உடலில் ஏற்படும் துர்நாற்றம் நீங்க ஆவாரம் பூவை அரைத்துப்பூசிக் குளித்து வரலாம். ஆவாரம் பூக்களை எடுத்து ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கஸ்தூரி மஞ்சள், பச்சைப் பயறோடு சேர்த்து அரைத்து, குளிக்கும் போது பயன்படுத்தி வந்தால், தோலில் ஏற்படும் அரிப்பு, நமைச்சல் ஆகியவை சீக்கிரமே குணமாகும்.
கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், முகத்தில் ஏற்படும் சுருக்கம் போன்றவை நீங்கும். ஆவாரம்பூவை நிழலில் காய வைத்து, டப்பாவில் சேகரித்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பசுமையான ஆவாரம் பூக்கள் அல்லது காய வைத்த பூவின் பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, தயிரில் கலந்து முகத்தில் பூசி வந்தால், முகத்தில் இருக்கும் வடுக்கள் நீங்கும். முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்சினை இருப்பவர்களுக்கு, அது நீங்கி முகம் அழகும் பளபளப்பும் பெறும். ஆவாரம் பூவின் பொடியைப் பயன்படுத்தி தொடர்ந்து குளித்து வந்தால், உடலில் ஏற்படும் வியர்வை துர்நாற்றம் நீங்கும். ஆவாரம் செடி விதையைக் காய வைத்துப் பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதனை சிறிதளவு தண்ணீர் விட்டு, கண் இமைகளைச் சுற்றிப் பற்றாகப் போட்டு வந்தால், கண் எரிச்சல் மற்றும் சிவந்த நிறம் நீங்கும்.
மேலும் படிக்க: பெண்களுக்கான சில மருத்துவ குறிப்புகள்
முக அழகுக்கு மட்டுமின்றி, ஆவாரையின் இலை, பூ, காய் , பட்டை , வேர் என அனைத்துமே மருத்துவக்குணங்களை கொண்டது. உடலில் அதிகமாகும் சூட்டைக் குளிர்ச்சிப்படுத்த உதவும் சித்த மருத்துவத்தில் நீரிழிவுக்கு மருந்தாக இருப்பது ஆவாரை தான், நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆவாரம் பூ. நீரிழிவால் உண்டாகக் கூடிய தாகம், உடல் சோர்வு, தொண்டை வறட்சி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற உபாதைகளையும் கட்டுப்படுத்துகிறது. இதன் இலை, வேர், பட்டை, பிசின் அனைத்தையும் ஒன்றாக்கி தயாரிக்கப்படும் நீர், நீரிழிவைக் கட்டுப்படுத்துவதோடு அதனால் உண்டாகும் பிற நோய்களையும் குணப்படுத்துகிறது.
உடல் சூட்டைக் குறைக்கக்கூடிய ஆவாரை, கூந்தலுக்கும் வலுகொடுக்கும். குழந்தைகளுக்கு வியர்க்குரு, கோடையில் உடல் எரிச்சலாகாமால் இருக்க ஆவாரை இலையை அரைத்து உடலில் பூசி குளிக்க வைக்கலாம். ஆவாரம்பூவைக் குடிநீராக , துவையலாக, பருப்பு கலந்து கூட்டாகவும் சமைத்து சாப்பிடலாம். பாசிப் பருப்புடன் வேகவைத்து நெய் கலந்தும் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம். தேநீர் மட்டுமின்றி ரசம், குழம்பு வைத்தும் சாப்பிடலாம். ஆவாரம் பூக்களை நிழலில் உலர்த்தி பொடியாக்கியும் பயன்படுத்தலாம். இவ்வாறு பல்வேறு வகைகளில் ஆவாரம் பூ பயனளிக்கிறது.