பெண்களின் உடலில் உள்ள ஏழு அதிசயங்கள்!
ஆரஞ்சு பழத்தின் அளவே இருக்கும் பெண்ணின் கருப்பை, ஒரு குழந்தையை தாங்கி பெற்றெடுக்கும் அளவுக்கு பெரிதாகும் என்பதே பேரதிசயம். இதைத் தவிர பெண்களின் உடலில் பல அதிசயங்கள் உள்ளன. இயற்கை, பெண்மைக்கென்றே சிறப்பாக அளித்த அந்த வரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
1. நோய் எதிர்ப்பு சக்தி:
குடும்பம் , குழந்தை வளர்ப்பு , உற்றார் உறவினர் , விருந்தோம்பல் , சமூகம் , பொருளீட்டுதல் என்று பெண்கள் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு சிறு நோய்த்தொற்றுக் கூட அவர்களை சோர்வடைய செய்யாத வகையில் நோயெதிர்ப்பு சக்தி பெண்களுக்கு இயற்கையிலேயே அதிகமாக உள்ளது. கொரோனா தொற்று பாதித்தவர்களில் ஆண்களை விட பெண்கள் குறைவு எனும் ஆய்வறிக்கையே இதற்கு சான்று.
2. நினைவாற்றல்:
பெண்களால் 10 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்களையும் எளிதாக நினைவுகூர முடியும். சம்பவங்கள் மட்டுமின்றி வாசனைகளைக் அவர்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
3. பல நிறங்களை காணுதல்:
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி பெண்களால் ஒரே நேரத்தில் 12 வெவ்வேறு நிறங்களைக் கூட காண முடியுமாம்.
4. நெகிழ்வு தன்மை:
பிரசவ காலங்களில் குழந்தை பிறப்புக்கு ஏற்றார் போல அவர்களின் உடற்கட்டமைப்பில் பல்வேறு நெகிழ்வு தன்மைகள் உருவாகின்றன. தசைகளின் விரிவாக்கமானது இதில் பெரும்பங்கு வகிக்கிறது.
5. உறக்கத்திலும் ஒலியை உணர்தல்:
ஆழ்ந்து தூங்கினாலும் தன்னைச்சுற்றி கேட்கும் ஒலிகளை பெண்களால் உணர முடியும். தாய்மார்கள் குழந்தை லேசாக அழ ஆரம்பித்தாலே சட்டென்று எழுந்துவிடுவது இதனால் தான்.
6. கழுத்து தசைகள்:
யாராவது கூப்பிட்டால் திரும்பிப்பார்க்கும்போது ஆண்கள் முழு உடலையும் திருப்புகிறார்கள். ஆனால் பெண்கள் தலையை மட்டுமே திருப்புகிறார்கள். பெண்களின் கழுத்து தசைகள் அத்தகைய சிறப்பான அமைப்பை பெற்றுள்ளன.
7. சுவை மொட்டுக்கள்:
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தினார்கள். அதில் ஆண்களை விட பெண்களின் நாக்கில் சுவை மொட்டுகள் அதிகம் இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும், பெண்களில் 35 சதவீதம் பேர் ” சூப்பர் டேஸ்டர்கள் ” என்கின்றனர் ஆய்வு நடத்தியவர்கள்.
இது தவிர , பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் திறன் படைத்தது. பெண்களால் ஒரு நாளில் எட்டாயிரம் வார்த்தைகளை உச்சரிக்க முடியும்.
கர்ப்பகால ஆலோசனைகள்:
கருவற்றிருக்கும் ஆரம்ப காலங்களில், கர்ப்பிணிகள் சந்திக்கும் பொதுவான பிரச்சினை குமட்டல் மற்றும் வாந்தி. எதை சாப்பிட்டாலும் வயிற்றில் தங்காமல் குமட்டிக் கொண்டே இருக்கும். இதற்காக சாப்பிடாமல் இருந்தால், நமக்கும், குழந்தைக்கும் தேவையான சக்தியும், சத்துக்களும் கிடைக்காது. இதை தவிர்க்க மூன்று வேளை உணவு உண்பதற்கு பதிலாக, அதே அளவு உணவை ஆறு வேளையாகப் பிரித்து சாப்பிடலாம். இதனால் வயிறு காலியாக இருப்பதை தவிர்க்கலாம்.
கர்ப்ப காலங்களில் சில பெண்களுக்கு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு ஏற்றதாக இருக்கும். சிலருக்கு புரதச் சத்து நிறைந்த உணவுகள் ஏற்றதாக இருக்கும். எனவே நமக்கு ஏற்ற உணவு எது என்பதை கண்டறிந்து சாப்பிடுவது சிறந்தது. நாம் எதை சாப்பிட்டாலும், அது நமக்கும், நமது குழந்தைக்கும் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும் என்பதை மட்டும் மனதில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: பெண்களுக்கான சில மருத்துவ குறிப்புகள்
வாந்தி மற்றும் குமட்டல் காலை நேரங்களில் தீவிரமாக இருக்கும். காலையில் வயிறு காலியாக இருப்பதாலும் இவ்வாறு ஏற்படலாம். எனவே படுக்கைக்கு அருகிலேயே சில உணவுகளை வைத்திருப்பது நல்லது. எழுந்த உடனேயே கொஞ்சமாக சாப்பிட்டு, 20 நிமிடங்கள் வரை ஓய்வெடுத்தால் குமட்டல் வருவதை தடுக்கலாம்.
கர்ப்பகாலத்தில் ஆறிய உணவுகளை சாப்பிடாமல், புதிதாக தயாரித்த சூடான உணவுகளை சாப்பிட வேண்டும். குளிர்பதன பெட்டியில் வைத்த உணவுகளை சாப்பிடாமல், அறை வெப்பநிலையில் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில், குளிர்பதன பெட்டியில் வைத்த உணவுகள் ஜீரணிக்க கடினமாக இருக்கும். கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் அதிகமாக ஏற்படும். ஆகையால் அதிக காரம் மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகளை முழுவதுமாக தவிர்த்து விடுதல் நல்லது. ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
ஒரு சில பெண்களுக்கு, சில வாசனை திரவியங்கள், அறைகளில் ஒளிரும் விளக்குகள் போன்ற காரணிகளாலும், குமட்டல், வாந்தி போன்ற உணர்வுகள் தூண்டப்படலாம். அவ்வாறு இருந்தால் அத்தகைய காரணிகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. காலை வேளையில் இஞ்சி கலந்த தேநீர் குடிப்பது, இஞ்சி மிட்டாய்கள் சாப்பிடுவது போன்றவை குமட்டலைக் கட்டுப்படுத்தும். வீட்டில் செய்யப்படும் வைத்தியங்கள் மூலம், நிவாரணம் பெற முடியாத பெண்கள் மருத்துவர் ஆலோசனையை நாடுவது சிறந்தது.
கர்ப்பகால உணவுமுறை:
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் நிகழும் முக்கியமானத் தருணமாகும். குழந்தையைக் கருவில் தாங்கும் போது உடலிலும், மனதிலும் பலவிதமான மாற்றங்கள் ஏற்படும். சில வகை உணவுகளை உடல் ஏற்றுக்கொள்ளும். சிலவகை உணவுகள் சாப்பிட்ட வேகத்திலேயே வாந்தியாக வெளியேற்றப்படும். கர்ப்ப காலத்தில் எந்த விதமான உணவுகளைச் சாப்பிட வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றிக் காண்போம்.
கர்ப்ப காலத்தில் எல்லா சத்துக்களும் சரிவிகிதத்தில் அடங்கிய உணவை மட்டும் தேவையான அளவு சாப்பிட வேண்டும். கர்ப்ப காலத்தில் 5 முதல் 9 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். ஆரோக்கியமான உடல் எடை எளிதான பிரசவத்துக்கு வழி வகுக்கும். கர்ப்ப காலத்தில் கார்போ ஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைக் குறைவாக உண்ண வேண்டும். புரதச்சத்து அதிகம் உள்ள முட்டை, பால், காய்கறிகள், இறைச்சி, சோயா பீன்ஸ், முளைக்கட்டிய தானியங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
மேலும் படிக்க: ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்
இளநீர், எலுமிச்சை சாறு, மோர் போன்ற ஆரோக்கியமான பானங்களைப் பருகலாம். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுகள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு குறைபாடு இருந்தால் எவ்வகை ஊட்டச்சத்துக்களைக் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்.
இரும்புச்சத்து:
முருங்கைக்கீரை, முருங்கைக்காய், சுண்டைக்காய், கடலைமிட்டாய், பேரீச்சம்பழம், முட்டை, ஈரல், கைக்குத்தல் அவல், கேழ்வரகு, உலர் திராட்சை போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.
கால்சியம்:
பால், முட்டை, வெண்ணெய், கேழ்வரகு போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும். ஃபோலிக்
அமிலம்:
பீன்ஸ், ஆரஞ்சு, கைக்குத்தல் அரிசி, பேரீச்சம்பழம், எலுமிச்சை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
வைட்டமின் சி:
ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி, கொய்யா போன்ற பழங்களை சாப்பிடலாம்.
வைட்டமின் பி 12 :
அசைவ உணவுகள் அனைத்தையும் சாப்பிடலாம். சைவ உணவு உண்பவர்கள் இந்த வைட்டமினை மாத்திரை வடிவத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
ரத்த சோகை :
இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, வைட்டமின் பி 12 போன்ற சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய் :
மா, பலா, வாழை போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் . மாதுளை, ஆப்பிள் , ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்களை சாப்பிடலாம். கிழங்கு வகைகளைத் தவிர்க்க வேண்டும். அரிசி உணவைக் குறைத்து, காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும்.
ரத்த அழுத்தம் :
உப்பு, எண்ணெய் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஊறுகாய் போன்ற பதப்படுத்திய உணவுகளை சாப்பிடக் கூடாது.
தைராய்டு :
உடலில் தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரக்கும் கர்ப்பிணிகள், முட்டைக்கோஸ், முள்ளங்கி, காலிஃபிளவர் போன்றவற்றை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமா?
இப்போதெல்லாம் என்ன குழந்தை பிறந்துள்ளது? என்பதற்கு அடுத்த கேள்வியாக குழந்தை என்ன நிறத்தில் பிறந்துள்ளது? என்று தான் பலரும் கேட்கிறார்கள். அந்த அளவுக்கு நிறத்தின் மீதான ஆர்வம் எல்லோருக்கும் அதிகரித்துள்ளது. நிறம் பற்றிய கேள்வி வரும்போதுதான் ‘சிவப்பு தங்கம்’ என்று அழைக்கப்படும் குங்குமப்பூ பற்றிய பேச்சும் எழுகிறது. குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என நம்பப்படுகிறது. இது உண்மையா?
ஒரு பெண் கர்ப்பமானதும் சுற்றி இருப்பவர்கள் கொடுக்கும் முதல் டிப்ஸ் குங்குமப்பூ கலந்த பாலைத் தினமும் குடிக்க வேண்டும் என்பதுதான். அப்படிக் குடித்தால்தான் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்று பலரும் கருதுகிறார்கள். சீமந்த விழாவில் குங்குமப்பூவை கொடுக்கும் அளவிற்கு இந்த நம்பிக்கை ஆழமாகப் பதிந்துள்ளது. உண்மையில் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமா? இதற்கு மருத்துவர்களின் பதில் ‘ நோ ‘ என்பதே.
மேலும் படிக்க: உணவும் ஆரோக்கியமும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது
உண்மையில் குழந்தையின் நிறத்தைத் தீர்மானிப்பது பெற்றோரின் மரபணுக்களும், மெலனின் சுரப்பியும்தான். சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து நம் சருமத்தை பாதுகாப்பது இந்த மெலனின் தான். யாருக்கு உடலில் மெலனின் அதிகமாக சுரக்கிறதோ அவர்களுக்குக் கறுப்பாகவும், மெலனின் அளவு குறைவாக இருப்பவர்களுக்குச் சிவப்பாகவும் குழந்தை பிறக்கும் என்கின்றனர். ஆகவே, நிறத்திற்கும் குங்குமப்பூவிற்கும் ஒரு துளி அளவு கூட சம்பந்தம் இல்லை என்பதே உண்மை.
ஆனால், கர்ப்பிணிகளுக்குப் பல வகைகளில், இந்த குங்குமப்பூ மருத்துவரீதியில் உதவியாக இருக்கிறது. பாலில் குங்குமப்பூவை கலந்து பருகினால், அதன் மணமும் சுவையும் வாந்தி எடுக்கும் உணர்வைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் பசியையும் தூண்டுகிறது. ஐந்தாம் மாதம் முதல் கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ சாப்பிடத் தொடங்கலாம். உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த மசாலாப் பொருளாகவும் இது உள்ளது. குங்குமப்பூவின் சுவையும் மணமும் கவர்ந்து இழுக்கக்கூடியது. ஆகவே, கர்ப்பிணிகளுக்கு இதன் மீது ஈர்ப்பு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்பதில் சந்தேகமே இல்லை. குங்குமப்பூவுக்கும் குழந்தையின் நிறத்துக்கும்தான் தொடர்பில்லையே தவிர இவற்றில் பலவித நன்மைகள் அடங்கியுள்ளன.
நன்மைகள் :
செரிமான தன்மையை அதிகரிக்கச் செய்யும். சருமத்தின் பொலிவு கூடும். நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும். மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும். மூட்டுகள் பலமாகும். புற்றுநோயைத் தடுக்கும். சுவாச பிரச்சினைகளுக்கு தீர்வு தரும்.
சிலர் தங்கள் குழந்தை நல்ல சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூவை அதிகளவில் சாப்பிடுகின்றனர். இது உடலுக்கு ஆபத்தானது. நாள் ஒன்றுக்கு பத்து கிராமுக்கு மேல் குங்குமப்பூ எடுத்துக்கொண்டால் அது ஆபத்துதான். பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மருத்துவரின் அறிவுரையின்படி உட்கொள்வதே சிறந்தது.
பெண்கள் சந்திக்கும் எலும்பு தேய்மான பிரச்சினை:
மனித உடலின் வடிவமைப்பு, உறுதி ஆகியவற்றுக்கு அடித்தளமாக இருப்பவை எலும்புகளாகும். இதயம், நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளுக்கு பாதுகாப்பு கவசமாகவும் இவை இருக்கின்றன. உடலின் தொடர்ச்சி இயக்கத்துக்கு தேவையான கால்சியத்தை சேமிப்பவையாக எலும்புகள் அமைந்துள்ளன. அவற்றின் உட்புறம் உள்ள மஜ்ஜையில் இருந்துதான், ரத்த சிவப்பணுக்கள் உருவாகுகின்றன. சத்துள்ள உணவு வகைகளை உண்ணாதது மற்றும் வயது முதிர்ச்சி ஆகிய காரணங்களால், எலும்புகளின் அடர்த்தி படிப்படியாக குறைந்து விடுகிறது. இந்த குறைபாடு, ‘ஆஸ்டியோபொரோசிஸ்’ என்று குறிப்பிடப்படுகிறது.
குறைபாட்டுக்கான காரணங்கள்:
வயது முதிர்ச்சி, உணவில் போதிய சத்துக்கள் இல்லாதது ஆகியவை தவிர, எலும்புகள் வலிமை இழப்பதற்கான மற்ற காரணங்களையும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இளம் வயதில் ஓடியாடி விளையாடாதது, உடற்பயிற்சிகளில் ஈடுபடாதது, சூரிய ஒளி உடலில்பட வாய்ப்பில்லாத வாழ்க்கை முறை ஆகியவையும் எலும்புகளின் அடர்த்தி குறைவதற்கான காரணங்களாகும். இயற்கையாகவே எலும்புகளில் முதிர்வடைந்த செல்கள் மறைந்து, புதிய செல்கள் உற்பத்தியாவதன் மூலம், அவை தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்கின்றன.
மேலும் படிக்க: சரும ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் சில குறிப்புக்கள்
இந்த சுழற்சி முறை, வயது அதிகமாவதற்கு ஏற்ப மெதுவாக நிகழ்கிறது. கால்சியம், வைட்டமின்டி ஆகியவற்றின் பற்றாக்குறை, குறைவான உடல் எடை, தேவையான அளவுக்கு பாலியல் சுரப்பிகள் இயங்காதது, சில மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் ஆகியவையும் எலும்புகளின் அடர்த்தி குறைய காரணமாக உள்ளன. குழந்தைகள், மாதவிலக்கு நிற்கும் கட்டத்தில் உள்ள பெண்கள் ஆகியோரை இந்த குறைபாடு அதிகமாக பாதிப்பதாக தெரிய வந்துள்ளது. முடக்குவாதம், சர்க்கரை நோய் மற்றும் தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு இக்குறைபாடு ஏற்படக்கூடும்.
அறிகுறிகள்:
இந்த பாதிப்பு உள்ள பலருக்கும் கழுத்து மற்றும் முதுகு பகுதிகளில் தொடர்ச்சியான வலி ஏற்படக்கூடும். எதிர்பாராமல் காயம் ஏற்படுவது அல்லது எலும்பு முறிவு ஏற்படுவது ஆகியவற்றுக்குப் பின்னரே இந்த குறைபாடு இருப்பது கண்டறியப்படுகிறது. மேலும், லேசாக அடிபட்டாலும் எலும்பு முறிவு ஏற்படுவது, வழக்கமான பணிகளில் ஈடுபடும் போதே எலும்பு முறிவது ஆகியவையும் இந்த குறைபாட்டின் அறிகுறிகளாகும்.
தீர்வுகள்:
கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உண்பது மற்றும் தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவது ஆகியவை இந்த குறைபாட்டை தவிர்க்கும் பொதுவான வழிகளாகும். மேலும் பாதாம் பால், சோயா பால், வேர்க்கடலை, முட்டை, கேழ்வரகு மற்றும் கீரைகள் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். காலை மற்றும் மாலை நேரங்களில் சூரிய வெப்பம் உடலில் படுமாறு நடைப்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி மேற்கொள்வதும் அவசியம்.