ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்:
உடல் ஆரோக்கியத்தில் நாம் போதிய கவனம் செலுத்துகிறோமோ? உடற்பயிற்சி, சிறப்பு வகை உணவுகள், ஆழ்ந்த தூக்கம் போன்றவற்றை சரியாகப் பின்பற்றுகிறோமா? ஒருநாளில் எத்தனை நிமிடங்கள் இருக்கின்றன. அந்த ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் எத்தனை ஆரோக்கியமான விஷயங்களை நமக்காக செய்கிறோம். அது யோசிக்க வேண்டிய விஷயமே! இனிமேலாவது ஒவ்வொரு நிமிடங்களையும் நமக்கு சாதகமாக பயன்படுத்தி நமக்குத் தேவையானவற்றைச் செய்வோம்.
பல் இடுக்குகளில் சுத்தம்:
பல் ஆரோக்கியம் என்பது மிக முக்கியம். பொதுவாக பல் இடுக்குகளை சுத்தமாக வைக்க ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரம் போதும். அரை நிமிடம் வாய் கொப்பளியுங்கள். மவுத்வாஷ் அல்லது உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் தினமும் அரை நிமிடம் கண்டிப்பாக வாய் கொப்பளியுங்கள். இப்படிச் செய்வதால் வாயிலிருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கலாம். சாப்பிட்டு முடித்ததும் வாய் கொப்பளிப்பது பாக்டீரியாக்கள் உருவாகாமல் தடுக்கும்.
காலை எழுந்ததும் தண்ணீர்:
காபி குடிப்பதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவது மிகவும் நல்லது. இரவெல்லாம் வயிறு காலியாக இருந்திருக்கும் என்பதால் தண்ணீர் அருந்துவது, உடலுக்கு சூப்பர் உணவாக அமையும். ஆகவே, அவசியம் காலையில் கண் விழித்ததும் தண்ணீர் அருந்துங்கள்.
புரோட்டின் தேவை:
பால், தயிர், வெண்ணெய், பாதாம், பிஸ்தா, முந்திரி, பூசணி, சூரியகாந்தி போன்றவற்றின் விதைகள் புரோட்டீன் நிறைந்தவை. இதில் ஏதேனும் ஒன்றை காலை உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.
சின்னஞ்சிறு உடற்பயிற்சி:
கண்டிப்பாக ஒரு நாளில் கொஞ்ச நேரமாவது உட்காருவீர்கள் இல்லையா? அப்போது உட்கார்ந்து கொண்டே இருக்காமல், ஒரு நிமிடத்தில் பத்து முறையாவது உட்கார்ந்து எழலாம். முடிந்த அளவு கொஞ்சம் வேகமாக எழுந்து உட்கார முயற்சி செய்யுங்கள். இவை தரும் நன்மைகள் எண்ணற்றவை. நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிட்டால் அதனை முன் குறிப்பீடு செய்ய வேண்டும்.
நீங்கள் வேற நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை விட காலை நேரத்தில் அதுவும் முன் குறிப்பீடு செய்து, செய்யும் உடற்பயிற்சி அதிக நன்மைகளை ஏற்படுத்துகிறது. உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு நமது உடல் சரியாகிக் கொள்ளும். காலையில் செய்யும் உடற் பயிற்சியும் இரவில் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது. எந்தெந்த மக்கள் காலை உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனரோ அவர்கள் நல்ல உணவு பழக்கவழக்கங்களையும் பின்பற்றுகின்றனர். செரிமானம் மற்றும் நல்ல உடல் செயல்பாட்டை ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க: உடல் ஆரோக்கியத்திற்கு சில குறிப்புகள்
செரிமானக் கோளாறுகள்:
ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் , உடலில் வாதம் , பித்தம் , கபம் ஆகிய மூன்றும் சரியான அளவில் இருக்க வேண்டும் . அவற்றில் சமநிலைக்குறைவு ஏற்படும்போது , பல்வேறு வியாதிகள் ஏற்படுகின்றன . இந்த பிரச்சினைக்கு எளிதாக தீர்வு காணும் வகையில் , முன்னோர்கள் கடைப்பிடித்த விஷயமே தாம்பூலம் தரிக்கும் பழக்கமாகும் . 40 வயதை கடந்தவர்களுக்கு ஏற்படும் செரிமானக் கோளாறுகள் மற்றும் கால்சியம் பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு எளிய தீர்வாகவும் இந்த பழக்கம் அமைந்துள்ளது .
தாம்பூலத்தில் உள்ள முக்கிய பொருளான வெற்றிலை சிறந்த மூலிகையாகும் . அது , சளித் தொல்லையை நீக்கும் குணம் கொண்டது . அதனால் , குழந்தைகள் சளித்தொல்லையால் சிரமப்படும் போது , வெற்றிலையை வதக்கி , சாறு பிழிந்து அருந்துவதற்கு தருவார்கள் . மேலும் , சுண்ணாம்பு சேமிக்கப்பட்டுள்ள பாத்திரத்தின் மேற்புறம் பரவியிருக்கும் தெளிந்த நீரையும் குழந்தைகளுக்கு கொடுப்பார்கள் . இவற்றால் , கால்சியம் பற்றாக்குறை மற்றும் சளித்தொல்லைக்கு ஒரே சமயத்தில் தீர்வு காணப்பட்டது . முற்காலங்களில் சாப்பிட்ட பின்பு 3 வேளையும் தாம்பூலம் தரிக்கும் வழக்கம் இருந்து வந்தது.
மேலும் படிக்க: உணவும் ஆரோக்கியமும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது
தாம்பூலம் அளிக்கும் நன்மைகள் உணவுக்கு பின்னர் தாம்பூலம் தரிப்பது ஜீரண சக்தியை அதிகரிக்கும் . மேலும் , வெற்றிலை , பாக்கு , சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் சரியான அளவில் சேர்த்து மெல்லும் போது , உருவாகும் சுவை , உடலுக்கும் , மனதுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும் .
தாம்பூலத்தில் உள்ள பாக்கின் துவர்ப்பு சுவை பித்தத்தையும் , சுண்ணாம்பில் உள்ள கார சுவை வாதத்தையும் , வெற்றிலையின் சுவை கபத்தையும் அகற்றும் தன்மை கொண்டது . தாம்பூலத்தில் கூடுதலாக சேர்க்கப்படும் ஏலக்காய் , கிராம்பு , ஜாதிபத்திரி ஆகியவற்றால் வாய் மற்றும் உள்ளுறுப்புகளை பாதிக்கும் கிருமிகள் கொல்லப்படுகின்றன .
தரிக்கும் முறை:
தாம்பூலத்தை வாயில் போட்டு நன்றாக மெல்ல வேண்டும் . அப்போது முதலில் சுரக்கும் உமிழ்நீரை துப்பிவிட வேண்டும் . அதன் பிறகு , நிதானமாக மெல்லுவதால் உருவாகும் உமிழ் நீரை விழுங்க வேண்டும் . காலை உணவுக்குப் பின் தரிக்கும் தாம்பூலத்தில் பாக்கு வழக்கத்தை விட சற்று கூடுதலாக சேர்க்கப்படுவதால் , மதிய வேளையில் வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் பித்தம் கட்டுப்படும் . மதிய உணவுக்கு பின் சுண்ணாம்பை அதிகம் சேர்க்கும் போது , உணவினால் உடலில் உருவாகும் வாயுத்தொல்லை கட்டுப்படும் . இரவில் வழக்கத்தை விட ஓரிரு வெற்றிலைகளை கூடுதலாக சேர்த்துக் கொண்டால் சளித்தொல்லை கட்டுப்படும்.
உடலில் சேரும் நச்சு நீங்க:
நமது உடலிலிருந்து கழிவுப் பொருட்கள் வெளியேறாமல் உடலிலேயே தங்கி இருந்தால் , நாளடைவில் அவை நச்சுப்பொருட்களாக மாறிவிடும் . இதனால் நம் உடல் புத்துணர்ச்சியை இழந்து , பல்வேறு நோய்களுக்கு உள்ளாகும் . ஆகையால் அவற்றை நீக்குவதே சிறந்தது . கிராமங்களில் இப்பிரச்சினைக்கு பல பாட்டி வைத்திய முறைகளை பின்பற்றுகிறார்கள் . அவற்றில் சில இதோ,
பச்சிளம் குழந்தைகளுக்கு சுக்கு , சீரகம் , மிளகு , பெருங்காயம் , வேப்ப இலைக் கொழுந்து , மஞ்சனத்தி இலைக் கொழுந்து ஆகியவற்றை விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யில் வதக்கி , சிறிதளவு கல்லுப்புடன் சேர்த்து மையாக அரைக்கவும் . அதை சிறிய உருண்டைகளாக உருட்டி காய வைக்கவும் . தேவையின்போது அவ்வுருண்டையைத் தண்ணீரில் ஊற வைத்து , மையாக அரைத்து வெந்நீரில் கலந்து கொடுக்கலாம் .
உடல் நலம் பெற:
சிறிதளவு பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடலில் உள்ள நச்சு வெளியேறும் . புகைப்பிடித்தல் , மது அருந்துதல் , மாசுபட்ட குடிநீர், கலப்பட உணவு போன்றவற்றால் உடலில் நச்சு சேருகிறது . அதை வெளியேற்றி உடல் நலம் பெற அகத்திக்கீரை , தனியா , பனங்கற்கண்டு ஆகியவற்றை பாலில் போட்டு கொதிக்க வைக்கவும் . பின்னர் , பாலை வடிகட்டி , சூடாகவோ அல்லது பிரிட்ஜில் வைத்து குளிர் பானமாகவோ பருகலாம் . கற்பூரவள்ளி இலையுடன் வேப்பம் ஈர்க்கு சேர்த்து நன்கு அரைக்கவும் . பின் , அரைத்த கலவையை சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் , வயிற்றில் உருவாகும் நாக்குப் பூச்சிகள் , மலத்துடன் வெளியேறிவிடும்.
மேலும் படிக்க: சரும ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் சில குறிப்புக்கள்
மா , பலா , வாழை ஆகிய முக்கனிகளையும் சாப்பிட்டு செரிமானம் ஆகவில்லை என்றால் மந்தம் , வயிற்றுவலி , ஏப்பம் ஆகியவை ஏற்படும் . இதனை போக்க துவரம் பருப்பை வேக வைத்து , வடித்த நீரில் மிளகும் , பூண்டும் தட்டிப்போட்டு ரசம் வைத்து சாப்பிடலாம் . விரைவில் நிவாரணம் கிடைக்கும் .
ஆவார இலை , பூ , காய் , பட்டை , வேர் ஆகியவற்றை தூளாக்கி சலித்து எடுத்து , சூரணமாக்கிக் கொள்ளவும் . அதில் முப்பது கிராம் கோரக்கிழங்கு சூரணம் , பத்து கிராம் கிச்சிலி கிழங்கு சூரணம் கலக்கவும் . தினமும் குளிக்கும் போது சோப்புக்குப் பதிலாக இந்த சூரணக் கலவையை தேய்த்து குளிக்கலாம் . இதனால் வேர்வையால் ஏற்படும் உடல் துர்நாற்றம் , தேமல் , சொறி , சிரங்கு போன்றவை அகலும் .
பாக்கை பொடி செய்து , பாலில் கலந்து குடித்து வர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும் . சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம் . இது நாக்குப் பூச்சி மற்றும் வயிற்றுப் பூச்சித் தொல்லையை நீக்கும் . மஞ்சனத்தி இலை , சீரகம் , சின்ன வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும் . அதை வடிகட்டி சாற்றை குடிக்கலாம் . இது செரிமான கோளாறை சரிசெய்து , உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
முடி உதிர்வு பிரச்சினைக்கு ‘ உணவே மருந்து ‘
முடி கருகருவென , அடர்த்தியாக , நீளமாக இருக்கவே எல்லோரும் விரும்புவார்கள் . இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக அக்கறை உண்டு . சில பெண்களுக்கு இடுப்பு வரை கூந்தல் நீண்டு வளர்ந்திருக்கும் . இதைக் கண்டு சிலர் புருவத்தை உயர்த்துவதுடன் பொறாமைப்படுவதும் உண்டு . உதாரணமாக , நீண்ட கூந்தலுடைய பெண் ஒருநாள் ‘பாப் கட்டிங்’ செய்தாலோ அல்லது முடியின் அளவைக் குறைத்துக்கொண்டாலோ அதுபற்றி ஊரே பேசும் . அந்த அளவுக்கு முடி விஷயத்தில் பெண்களுக்கு அதிக ஆர்வமும் , அக்கறையும் உண்டு .
இன்றைய காலகட்டத்தில் , சுற்றுச்சூழல் மாசு மற்றும் தவறான உணவுப்பழக்கம் , ரசாயனக் கலவைகளை தலையில் பூசி அழகூட்டுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்களின் தலைமுடியில் பாதிப்பு ஏற்படுகிறது . ஆண்களில் பலரும் வழுக்கைத் தலை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள் . முடி உதிர்தலை பெரிய பிரச்சினையாக நினைக்காமல் அதை சரிசெய்வதற்குத் தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும் . சிகிச்சை என்றில்லாமல் , உண்ணும் உணவின் மூலம் அதைச் சரிசெய்ய நிறைய வழிகள் இருக்கின்றன . உலகிலேயே , வழுக்கைத் தலையர்கள் குறைவாக உள்ள நாடு சீனா என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது . அங்கு வசிப்பவர்கள் சோயா பீன்ஸ் அதிகம் சாப்பிடுவதுதான் அதற்கு காரணம் என்பதும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
உணவுப்பழக்கம்:
நம் ஊரில் சிலர் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைக் காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு மென்று சாப்பிடுவார்கள் . இன்னும் சிலர் கறிவேப்பிலை , மல்லித் தழை , புதினாவைச் சேர்த்து அரைத்து ஜூஸாக்கி நாட்டு சர்க்கரை சேர்த்துக் குடிப்பார்கள் . கறிவேப்பிலையை தனியாகவோ , ஜூஸாகவோ சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன் ரத்தத்தில் ஹீமோ குளோபின் அதிகரிக்கவும் உதவும் . இட்லி , தோசை போன்ற காலை உணவுக்கு , வழக்கமான தேங்காய் சட்னி , தக்காளி சட்னிக்குப் பதில் கறிவேப்பிலை , மல்லித்தழை , புதினா சேர்த்து அரைத்த சட்னி சாப்பிடலாம் . இதுவும் முடி வளர்ச்சிக்கு உதவக்கூடியதே . இதுபோன்ற எளிய உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வந்தாலே தலைமுடி பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை .
மேலும் படிக்க: உங்களை நீங்களே மெருகேற்ற வேண்டும்
அதேபோல் முருங்கைக்கீரை , பொன்னாங்கண்ணிக் கீரை , அரைக்கீரை போன்றவற்றை மதிய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது . முருங்கைக்கீரையில் சூப் தயார் செய்து அருந்தலாம் . கரிசலாங்கண்ணிக்கீரை , வெந்தயக்கீரை , மணத்தக்காளிக்கீரை , வல்லாரை மற்றும் நெல்லிக்காய் , சின்ன வெங்காயம் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால் தலைமுடி செழித்து வளரும் . தேங்காய் அல்லது தேங்காய்ப்பால் , கேரட் , பச்சைப் பட்டாணி போன்றவற்றை பச்சையாகச் சாப்பிடலாம் . பேரீச்சம் பழம் , அத்திப்பழம் சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவும் . தக்காளிப்பழம் , மயிர்க்கால்களை உறுதிபெறச் செய்வதுடன் முடி கருமையடைய உதவும் . உணவில் புளிப்பு அதிகம் சேர்த்தால் , முடி வளர்ச்சி பாதிக்கப்படும் .
கம்பு , கேழ்வரகு , சோளம் , பட்டாணி போன்றவற்றில் ‘ சிலிக்கான் ‘ சத்து அதிகமாக உள்ளதால் அவை முடி வளர்ச்சிக்கு உதவும் . வைட்டமின் ஏ சத்துள்ள காய்கறிகள் , வைட்டமின் பி சத்து நிறைந்த பருப்பு வகைகள் , வைட்டமின் சி சத்துள்ள பழங்களைச் சாப்பிடுவதும் நல்லது . இவை தவிர , மீன் , முட்டை , பாதாம் பருப்பு , முந்திரி பருப்பு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும் .