உடல் ஆரோக்கியத்திற்கு சில குறிப்புகள் மற்றும் தீர்வுகள்
நம் உடல் ஆரோக்கியத்திற்கு எந்தெந்த பானங்களை குடிக்க வேண்டும், எந்தெந்த பானங்களை குடிக்கக் கூடாது என்பதைப் பற்றி கீழே காண்போம்.
வெயிலுக்கு இதமாக என்ன குடிக்க வேண்டும்?
கோடைகாலம் ஆரம்பித்து விட்டாலே வெம்மை தகிக்க ஆரம்பித்துவிடும். இதனால் வெயிலுக்கு இதமாக நாம் அனைவரும் குளிர்பானங்களை பருகத் தொடங்கிவிடுவோம். எல்லோர் வீட்டு குளிர்சாதனப் பெட்டிகளிலும், வண்ண வண்ண குளிர்பான பாட்டில்கள் கண்ணை சிமிட்டிக் கொண்டிருக்கும். கார்பனேற்றம் செய்யப்பட்ட அந்த குளிர் பானங்களை குடிக்கும்போது, உடலும் மனமும் குளிர்வதாக உணர்வோம். ஆனால், அவற்றில் நன்மைகளை விட, தீமைகளே அதிகம் உள்ளன. கார்பனேற்றம் செய்யப்பட்ட சோடா போன்ற பானங்களை குடிப்பதால், உடலில் கெட்ட கொழுப்பு சேர்ந்து, உடல் பருமன் அதிகரிக்கிறது. குளிர்பானங்களில் திரவ சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. நமது உடலில் உணவு உண்பதால் சேரும் சர்க்கரையின் அளவை விட, சோடா போன்ற குளிர்பானங்கள் குடிப்பதால் சேரும் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. இதனால் மற்றவர்களை காட்டிலும், குளிர்பானம் குடிப்பவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக உடல் எடை அதிகரிக்கிறது.
குளிர்பானம்:
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சோடா போன்ற பானங்களை அதிகம் பருகுவதால், குழந்தைகள் 60 சதவீதம் அதிக உடல் பருமனுடன் காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. குளிர்பானங்களில் பிரக்டோஸ் எனும் சர்க்கரை அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. இதனை அதிகமாக உட்கொள்ளும்போது, கல்லீரல் வளர்சிதை மாற்றம் செய்ய முடியாமல், பிரக்டோசை கொழுப்பாக மாற்றுகிறது. இந்த கொழுப்பு கல்லீரலை சுற்றிப் படிந்து, கல்லீரல் கொழுப்பு நோயை உருவாக்குகிறது. இதனால் தொப்பை உருவாகி, இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
மேலும் படிக்க: உணவுப்பொருட்களை வீணாக்காமல் சமைப்பது எப்படி
‘ இன்சுலின் ‘ என்ற ஹார்மோன் நமது ரத்த ஓட்டத் திலிருந்து, குளுகோசை உயிரணுக்களுக்கு கொண்டு போன்ற குளிர்பானங்கள் குடிக்கும்போது, இன்சுலின் செல்கிறது. அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட சோடா செயல்பாடு குறைகிறது. இதனால் ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை பிரிக்க கணையம் அதிக அளவில் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. எனவே வளர் சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படுகிறது. மேலும், கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எதுவுமில்லை.
இதுமட்டுமல்லாமல், சோடா போன்ற குளிர்பானங்களை அதிக அளவில் குடிக்கும் நபர்களுக்கு, மற்றவர்களைக் காட்டிலும் கணையப் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு 87 சதவீதம் அதிகம் இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த பாதிப்பு ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகமாக உள்ளது. மேலும் பெருங்குடல் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. எனவே, ஆபத்து தரும் இந்த குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு பழங்கள், இளநீர், பதநீர் போன்றவற்றை பயன்படுத்தி உடல் நலத்தை மேம்படுத்துவதே சிறந்தது.
உணவைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்:
உணவைப் பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்களை இங்கே பார்ப்போம்.
உணவும் அதில் நமக்கே தெரியாமல் மறைந்திருக்கும் சில உண்மைகளும்?
மலச்சிக்கல், வாழைப்பழம் சாப்பிட்டால் சரியாகும் என்பது பொதுவான கருத்து. ஆனால், உடலில் புளிப்புச் சுவை அதிகரிப்பதால் ஏற்பட்டிருக்கும் மலச்சிக்கலை வாழைப்பழம் சரிப்படுத்தாது . சில நேரங்களில் நமக்கு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு, கசப்பு எனும் அறுசுவைகளில், ஏதேனும் சில சுவைகளை அதிகமாக சாப்பிடத் தோன்றும். அந்த வேட்கையை வைத்தே, உடலின் நோய்த் தன்மையை அறிய முடியும். நமது ஒவ்வொரு உள்ளுறுப்புகளும், ஒவ்வொரு சுவையோடு தொடர்புடையவை.
இரைப்பை இனிப்பு சுவையோடும், கல்லீரல் மற்றும் பித்தப்பை புளிப்புச் சுவையோடும், மண்ணீரல் துவர்ப்பு சுவையோடும், நுரையீரல் மற்றும் பெருங் குடல் காரச் சுவையோடும், சிறுநீரகம் உவர்ப்பு சுவை யோடும், இதயம் மற்றும் சிறுகுடல் கசப்பு சுவையோடும் தொடர்புடையவை. பெண்கள் கருவுற்ற காலத்தில், சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகள், கருவின் வளர்ச்சியில் அதிக பங்கு வகிக்கின்றன. எனவேதான், கருவுற்ற பெண்கள் உப்பு, புளிப்பு, மற்றும் துவர்ப்பு சுவைகளை அதிகம் விரும்புகின்றனர்.
மேலும் படிக்க: சில எளிய மருத்துவ குறிப்புகள்
நாம் உண்ணும் உணவில் அமிலத்தன்மை, காரத் தன்மை என்கிற இரண்டு தன்மைகள் உள்ளன. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவை கொண்ட உணவுகள் அமிலத்தன்மையும், காரம், உப்பு, கசப்பு சுவை கொண்ட உணவுகள் காரத்தன்மையும் கொண்டவை. நாம் இரண்டு தன்மையும் உள்ள உணவுகளைக் கலந்து உண்ணும் போது, உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படுவது இல்லை. அமிலத்தன்மை மட்டும் கொண்ட உணவுகளை அதிகமாக உண்ணும்போது செரிமானப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே உணவே மருந்து என்ற பழமொழிக்கேற்ப உணவில் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
உடல் எடையை குறைக்கும் மாலை நேர சிற்றுண்டிகள்:
நம்முடைய உணவு முறையில், ஒரு நாளுக்கு மூன்று வேளை உண்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். மூன்று வேளை உணவை ஐந்து அல்லது ஆறு வேளையாக பிரித்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனால் உடலில் சேரும் கலோரிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். இந்த வழிமுறை குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பலருக்கு மூன்று வேளையும் வயிறு நிறைய சாப்பிட்டாலும், மாலை நேரத்தில் நொறுக்குத்தீனி சாப்பிடவில்லை என்றால் அந்த நாளே முழுமையடையாதது போல் இருக்கும். மாலை மேகங்களைப் பார்க்கும்போதும், குளிர்ந்த காற்றை உணரும்போதும், காரசாரமாக பஜ்ஜி சாப்பிட்டால் நன்றாக இருக்கும், வேலைக்கு நடுவே ஏலக்காய் சேர்த்த சூடான டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றும். குழந்தைகள் பாக்கெட்டில் அடைத்திருக்கும் நொறுக்குத்தீனிகளை கேட்டு அடம்பிடிக்கும்போது, வேறு வழியில்லாமல், வாங்கி கொடுத்துவிட்டு , நாமும் அதையே மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவோம். இவற்றைத் தவிர்த்து, மாலை நேர சிற்றுண்டியை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொண்டால் உடல் எடையை குறைக்க முடியும்.
ஆரோக்கியமான சமையல் முறை:
மாலையில் டீ, காபிக்கு பதிலாக மோர், கிரீன் டீ, மூலிகை டீ, பாதாம் பால் குடிக்கலாம். நார்ச்சத்துள்ள பழங்கள் சாப்பிடலாம். புரதச்சத்து நிறைந்த நட்ஸ், உலர் பழங்கள் சாப்பிடலாம். காய்கறி சாண்ட்விச், காய்கறி சாலட் உடன் அக்ரூட் பருப்பு, பேரீச்சம்பழம் சேர்த்துக் கொள்ளலாம். பழங்கள் சேர்த்த ஸ்மூத்தீஸ், லஸ்ஸி பருகலாம். சிறுதானிய புட்டு, பணியாரம், காய்கறி சூப் குடிக்கலாம். இந்திய உணவு கலாசாரத்தைப் பொறுத்தவரை வீட்டில் சமைக்கும் உணவுகளுக்கு உடல் எடையைக் குறைக்கும் தன்மை உள்ளது. காரணம், ஆரோக்கியமான சமையல் முறை மற்றும் சமையல் பொருட்கள்.
கடைகளில் தயாரிக்கும் உணவுகளில் இடம் பெறும் கொழுப்பு பொருட்கள், சோடா, கார்பனேட்டட் பானங்கள், அதிக கலோரி, சர்க்கரை சேர்த்த உணவுகள் உடலின் எடையை அதிகரிக்க செய்யும். மேலும் சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன் போன்ற நோய்களை உண்டாக்கும். ஆகையால் மாலை சிற்றுண்டி பட்டியலில் நீக்க வேண்டிய சில உணவுகள் இதோ…..
சோடா, கார்பனேட்டட் பானங்கள், அதிக சர்க்கரை மற்றும் நிறமிகள் சேர்த்த குளிர்பானங்கள் . சாக்லெட், ஐஸ்கிரீம், மைதாவில் செய்த கேக், குக்கீஸ். எண்ணெயில் பொறித்த, வறுத்த உணவுகள் மற்றும் இறைச்சி, வனஸ்பதி, வெண்ணெய், கனோலா எண்ணெய், சோயாபீன் எண்ணெய், கிராஸ்பீத் எண்ணெய் போன்றவற்றால் செய்யப்பட்ட உணவுகள். இந்த சிற்றுண்டிகளின் பெயரைக் கேட்டவுடனேயே சுவைப்பதற்குத் தூண்டும். ஆனால் மனதை கட்டுப்படுத்தி இவற்றை தவிர்த்தால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
உணவுப் பழக்கத்தில் மாற்றம் தேவை:
பருவத்தே பயிர் செய் என்பது பழமொழி . இது பயிருக்கு மட்டுமல்ல நமக்கும் பொருந்தும். இன்று தினமும் பலவித நோய்கிருமிகள் நம்மை அறியாமல் , நம்மைச் சுற்றிலும் பரவிக் கொண்டிருக்கிறது . இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளவும், ஆரோக்கியமாக இருக்கவும் நாம் உண்ணும் உணவு சரியாக இருக்க வேண்டும். உணவு என்பது , வெறும் வயிற்றை நிரப்புவதற்காக மட்டுமல்ல . உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும் , செல்கள் வளர்ச்சியடைவதற்கும் , உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவு ஆதாரமான ஒன்றாகும் . அத்தகைய உணவை நாம் தேர்ந்தெடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவது நலம் தரும்.
உணவு மாற்றம்:
ரசாயனம் கலக்காத காய்கறிகள் , பழங்கள் , உணவுப் பொருட்களையே வாங்க வேண்டும் . இயற்கையான உணவுப் பழக்கத்துக்கு மாறுவது இன்றைய சூழலில் மிகவும் அவசியம் . உணவு மாற்றம் என்பது உணவில் கொண்டு வரும் மாற்றமாக மட்டும் இல்லாமல் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்வதிலும் இருக்க வேண்டும் . நேரம் தவறி உணவு உட்கொள்வதால் , பல பிரச்சினைகள் உருவாகும் . காலம் தவறி உண்பதால் உடலின் இயக்கத்திலும் மாற்றம் ஏற்படும் .
மேலும் படிக்க: குடும்ப நலன் காக்கும் சமையலறை பராமரிப்பு
குறிப்பாக , இரவில் நீண்ட நேரம் கழித்து உணவு உண்பதால் செரிமானக் கோளாறு உருவாகும் . நாம் சாப்பிடும் உணவில் சரிவிகித உணவு என்பது மிகவும் முக்கியம் . தாது உப்புகள் அதிகமுள்ள கீரை வகைகள் , காய்கறிகள் , பழங்கள் ஆகியவை தரமானதாக இருக்க வேண்டும் . புரதம் , மாவுச் சத்து குளுக்கோஸ் , கொழுப்புச் சத்துள்ள தானியங்கள் பயிறுகள் , கிழங்குகள் , பருப்புகள் ஆகியவற்றையும் அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளவும் .
சத்தான உணவை விட , எளிதில் செரிக்கும் உணவையே தேர்ந்தெடுப்பது நல்லது . விசேஷம் , பார்ட்டி போன்ற காரணங்களால் ஒவ்வாத புதிய வகை உணவையும் , எளிதில் செரிமானமாகாத உணவையும் உண்பதை தவிர்க்கலாம் . அதேபோல், உண்ணும் போது அவசரமாக உண்ணாமல் , மெதுவாக நிதானமாக மென்று உண்ண வேண்டும். அதிக காரம் , அதிக புளிப்பு உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும் .
தினமும் காலை உணவை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் . அந்நாளுக்குத் தேவையான முழுசக்தியும் அதிலிருந்தே கிடைக்கும் . இரவு உணவில் கோதுமை , சிறுதானிய வகைகள் , ரவை, ராகி உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் . இதனால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் . அதேபோல் , தயிர் , நீர்ச்சத்து நிறைந்த உணவைத் தவிர்க்க வேண்டும். சாப்பாட்டுக்கு இடையே தண்ணீர் குடிக்கக்கூடாது. இதனால் வயிற்றில் சுரக்கும் ஜீரண அமிலத்தன்மையின் செயல்திறன் குறையும் . எனவே செரிமானம் தாமதப்படும் .
அதேபோல் குளிர்பானம் அருந்துவதையும் தவிர்க்க வேண்டும் . அடிக்கடி , இஞ்சி , மல்லி , பனைவெல்லம் கலந்த பானம் அருந்துவது உடலுக்கு மிகவும் சிறந்தது . நாம் உண்ணும் உணவில் , கலோரிகள் தேவையான அளவு இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் . வயதுக்குத் தேவையான அளவு கலோரி எடுத்துக்கொள்வது அவசியம்.
மேலும் படிக்க: பெண்களுக்கான சில மருத்துவ குறிப்புகள்
நாம் உண்ணும் உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும். நம் உடலின் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் உணவு மட்டும் காரணம் அல்ல, நாம் சாப்பிடும் உணவின் நேரமும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே உணவில் கவனம் தேவை. நம் உணவு முறையில் கொண்டு வரும் நல்ல மாற்றமே, நம்மைப் பல நோய்களிலிருந்து பாதுகாக்கும்.